/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காலி நிலங்களை போலி பெயரில் விற்பனை செய்த 'பலே' நபர் கைது
/
காலி நிலங்களை போலி பெயரில் விற்பனை செய்த 'பலே' நபர் கைது
காலி நிலங்களை போலி பெயரில் விற்பனை செய்த 'பலே' நபர் கைது
காலி நிலங்களை போலி பெயரில் விற்பனை செய்த 'பலே' நபர் கைது
ADDED : ஜூலை 04, 2024 12:39 AM

ஆவடி, ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சம்பத். இவர், கடந்தாண்டு ஆவடி மத்திய குற்றப்பிரிவில் புகார் ஒன்று அளித்திருந்தார்.
அதில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது:
என் இரண்டாவது மருமகன் மோகன் ராஜுவின் சொந்த ஊர், காஞ்சிபுரம் மாவட்டம் ஓரிக்கை என்பதால், பூந்தமல்லி அருகே நிலம் வாங்க இடம் தேடினேன்.
அப்போது, பூந்தமல்லியைச் சேர்ந்த நிலத்தரகர் கார்த்திக் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. அவர், நசரத்பேட்டை, வரதராஜபுரத்தில் எம்.எம்.டி.ஏ., உரிமம் பெற்ற 1,980 சதுர அடி நிலத்தை, சதுரடி 3,300 என விலை பேசினேன்.
சந்திரன் என்பவருக்கு சொந்தமான மேற்கூறிய நிலத்தின் பொது அதிகாரம், ராமகிருஷ்ணன் என்பவரிடம் இருந்தது.இதனால் கார்த்திக் மற்றும் ராமகிருஷ்ணனிடம் 29.79 லட்சம் ரூபாய் கொடுத்தேன். மீதமுள்ள பணத்தை நகை அடகு வைத்து, தெரிந்தவரிடம் கடன் வாங்கி, நிலத்தை பத்திர பதிவு செய்து கொண்டேன்.
இந்நிலையில், நான் வாங்கிய நிலத்தில் பிரச்னை இருப்பதாக கூறி, பூந்தமல்லி சார் - பதிவாளர் அலுவலகத்தில் இருந்து என்னை அழைத்தனர்.
அங்கு சென்று விசாரித்த போது, நிலத்தின் உரிமையாளர் சந்திரன் போல ஆள்மாறாட்டம் செய்து, என்னை ஏமாற்றியது தெரிந்தது. எனவே, என்னை ஏமாற்றியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
இது குறித்து விசாரித்த ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார், தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி கொரட்டூரைச் சேர்ந்த சரத் பாபு, 36, என்பவரை நேற்று கைது செய்தனர்.
விசாரணையில், சரத்பாபு, ஆவடியைச் சேர்ந்த நிலத்தரகருடன் கூட்டு சேர்ந்து, காலியான நிலங்கள் மற்றும் அதன் உரிமையாளர்கள் பற்றிய விபரங்கள் சேகரித்து, பல ஆண்டுகளாக போலியான ஆவணங்கள் தயார் செய்து விற்பனை செய்தது தெரிய வந்தது.
இதுவரை அவர் மோசடி செய்த நிலத்தின் மதிப்பு 1.40 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.