ADDED : செப் 14, 2024 12:28 AM

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் அடுத்த, பரந்துார் ஊராட்சி தலைவராக, தி.மு.க.,வைச் சேர்ந்த பலராமன், 65, என்பவர் பதவி வகித்து வருகிறார். பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவருக்கு இப்பதவி ஒதுக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், இவருக்கும், துணை தலைவருக்கும் நிர்வாக ரீதியாக தகராறு ஏற்பட்டு, ஊராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகம் வரையில், ஏற்கனவே பஞ்சாயத்து நடந்துள்ளது. ஊராட்சி துணை தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை பலராமன், காஞ்சிபுரத்தில் இருந்து பரந்துாருக்கு, டி.வி.எஸ்., இருசக்கர வாகனத்தில் செல்லும்போது, அடையாளம் தெரியாத காரில் வந்த மர்ம நபர்கள், அவரை கத்தியால் கை, தலையில் வெட்டினர்.
இதில், பலராமன் மயங்கி விழுந்தார். அவ்வழியாக சென்றோர் மீட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பொன்னேரிக்கரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
