ADDED : ஜூன் 16, 2024 12:34 AM
சோழவரம்,
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அடுத்த அருமந்தை பகுதியில், மீஞ்சூர் - வண்டலுார் வெளிவட்ட சாலையில் இளைஞர்கள் சிலர், நேற்று மாலை வேகமாக பைக் ஓட்டிச் சென்றனர்.
அவர்கள், பைக்குகளை வளைத்து வளைத்து ஓட்டியபோது, ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. இதில் 'கே.டி.எம்.,' மற்றும் 'பல்சர்' பைக்கில் பயணித்த ஐந்து இளைஞர்கள் விழுந்து, பலத்த காயம் அடைந்தனர். இதில், குன்றத்துாரைச் சேர்ந்த மணி, 22, மற்றும் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
காயமடைந்த, பெசன்ட் நகரைச் சேர்ந்த மோகனகிருஷ்ணன், 30, கண்ணகி நகரைச் சேர்ந்த மாரிமுத்து, 32, மாங்காடு ஜெபேயர், 20, ஆகியோர், சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். விபத்து குறித்து செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரித்து வருகின்றனர்.