ADDED : மார் 31, 2024 01:38 AM
ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதி பா.ஜ., கூட்டணி த.மா.கா.,வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சி வேட்பாளராக வேணுகோபால், தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளார்.
அவர், ஆலந்துார் சட்டசபை தொகுதியில் ஓட்டு சேகரிக்க வராததால், அப்பகுதி பா.ஜ., நிர்வாகிகள், அவருக்கு ஆதரவாக ஓட்டு சேகரித்து வருகின்றனர்.
இது குறித்து, பா.ஜ.,வினர் கூறியதாவது:
தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., வேட்பாளர்கள், ஆலந்துாரில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடத்தி, இப்பகுதியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஓட்டு சேகரித்தனர்.
ஆனால், த.மா.கா., வேட்பாளர் வேணுகோபால், போட்டியிடுவதாக அறிவித்த நாளில் இருந்து ஆலந்துார் சட்டசபை தொகுதிக்கு வரவில்லை.
அவர் எப்போது வருவார் என்ற தகவல், த.மா.கா., நிர்வாகிகளுக்கு தெரியவில்லை. அவர் வருகை குறித்து, பா.ஜ., தலைவர்களும் எங்களிடம் எதையும் தெரிவிக்கவில்லை. ஆனாலும், தேர்தல் பணியில் கட்சியினர் சுணக்கம் அடையக் கூடாது என்பதற்காக, அவருக்காக வீடு வீடாக சென்று சைக்கிள் சின்னத்திற்கு ஓட்டு சேகரித்து வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
-- நமது நிருபர்- -
