/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கோல்கட்டா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
/
கோல்கட்டா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
ADDED : ஜூன் 04, 2024 12:17 AM
சென்னை, சென்னையில் இருந்து நேற்று காலை 8:30 மணிக்கு, 168 பேருடன் கோல்கட்டா செல்ல 'இண்டிகோ' விமானம் தயாராக இருந்தது. இந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக, டில்லி இண்டிகோ வாடிக்கையாளர் மையத்துக்கு காலை 7:10 மணிக்கு 'இ - மெயில்' வந்துள்ளது.
இதையடுத்து விமான போக்குவரத்து அமைச்சக அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் விமானத்தில் சோதனை மேற்கொண்டனர்.
விசாரணையில், இ-மெயில் வாயிலாக வந்த வெடிகுண்டு மிரட்டல் போலி என தெரிய வந்தது. 168 பயணியர்களுடன், ஐந்து மணி நேரம் தாமதமாக, மதியம் 1:20 மணிக்கு கோல்கட்டா புறப்பட்டுச் சென்றது.
இ-மெயில் அனுப்பிய மர்ம நபரை விமான நிலைய போலீசார் தேடுகின்றனர்.
இதற்கிடையே, சென்னை விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு 11:55 மணிக்கு மலேஷிய நாட்டு தலைநகர் கோலாலம்பூர் செல்லும், 'மலேஷியன் ஏர்லைன்ஸ்' விமானம், 187 பயணியருடன் புறப்படத் தயாரானது.
அப்போது விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. விமான பொறியாளர் குழுவினர் இயந்திரக் கோளாறு சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கு மேலாகியும் சரிசெய்ய முடியவில்லை.
விமானத்தில் இருந்த பயணியர் தரையிறக்கப்பட்டு பாதுகாப்பான பகுதியில் தங்க வைக்கப்பட்டனர். இயந்திரக் கோளாறு சரிசெய்யப்பட்டு, நேற்று காலை 3:30 மணியளவில், ஒன்றரை மணி நேரம் தாமதமாக விமானம் புறப்பட்டுச் சென்றது.