/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுவன் பலி; பயிற்சியாளர் உட்பட இருவர் கைது
/
நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுவன் பலி; பயிற்சியாளர் உட்பட இருவர் கைது
நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுவன் பலி; பயிற்சியாளர் உட்பட இருவர் கைது
நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுவன் பலி; பயிற்சியாளர் உட்பட இருவர் கைது
ADDED : ஆக 06, 2024 05:26 AM

சென்னை : சென்னை, கொளத்துார், விநாயகபுரத்தைச் சேர்ந்தவர் பாலேக்கர், 38. இவரது மனைவி ராணி. தம்பதியின் மகன் கிருத்திக் சபரீஷ்கர், 10. சிறப்பு குழந்தையான இவருக்கு மருத்துவ ஆலோசனையின்படி, நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது.
இதற்காக, கொளத்துார், அசோகா அவென்யூவில் உள்ள 'ப்ளு சீல்' நீச்சல் பயிற்சி கூடத்திற்கு, வாரத்தில் இரண்டு நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் பிற்பகல் மகனை அழைத்து கொண்டு பாலேக்கர் - ராணி தம்பதி அங்கு சென்றனர். ராணி, கிருத்திக் சபரீஷ்கருடன் நீச்சல் பயிற்சி கூடத்திற்கு சென்ற நிலையில், பாலேக்கர் காரில் அமர்ந்து தன் லேப் - டாப்பில் அலுவலக பணிகளை மேற்கொண்டுள்ளார்.
திடீரென அவரது மனைவி ராணி, பாலேக்கர் மொபைல் போனை தொடர்பு கொண்டு, அவசரமாக உள்ளே வருமாறு அழைத்துள்ளார். அவர் பதறியடித்து அங்கு செல்வதற்குள், ராணி வழியிலேயே மகனை துாக்கி கொண்டு வெளியே வந்துள்ளார்.
அசைவின்றி கிடந்த மகனை துாக்கி கொண்டு, பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவன் உயிரிழந்ததை உறுதி செய்துள்ளனர்.
இது குறித்து, அவரது தாய் ராணி, கொளத்துார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதில், அவர் குறிப்பிட்டிருந்ததாவது:
நீச்சல் பயிற்சியின் போது, பயிற்சியாளர் குழந்தையை மூச்சு விட கூட நேரம் கொடுக்காமல் தொடர்ச்சியாக பயிற்சி கொடுத்தார்.
அதனால் கிருத்திக் சபரீஷ்கர் மூச்சு விட சிரமப்பட்டு, நீரில் தத்தளித்துக் கொண்டிருந்ததை பார்த்து, பயிற்சியாளரிடம் தெரிவித்தேன்.
அதற்கு அவர் 'அப்படி இருந்தால் தான் நீச்சல் கற்றுக் கொள்ள முடியும். நீங்கள் சற்று அமைதியாக இருங்கள்; அவர் தானாக நீச்சல் பழகி மேலே வருவார்' என பொறுப்பே இல்லாமல் பதில் கூறினார்.
மேலும், வளர்ச்சி குன்றிய குழந்தை என்றும் பாராமல் அஜாக்கிரதையாக நீச்சல் பயிற்சி கொடுத்து மகனின் இறப்பிற்கு காரணமான பயிற்சியாளர் மீதும், முறையான பயிற்சியாளர்களை கொண்டு பயிற்சி வழங்காத நீச்சல் பயிற்சி மையத்தின் உரிமையாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து விசாரித்த போலீசார், பயிற்சியாளர் அவினேஷ், 32, மற்றும் ப்ளு சீல் உரிமையாளர் காட்வின், 35, ஆகியோரை, நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.