/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
உடல் அடக்கம் செய்ய லஞ்சம் ரூ.60,000! துக்க வீட்டிலும் அடாவடி வசூல்
/
உடல் அடக்கம் செய்ய லஞ்சம் ரூ.60,000! துக்க வீட்டிலும் அடாவடி வசூல்
உடல் அடக்கம் செய்ய லஞ்சம் ரூ.60,000! துக்க வீட்டிலும் அடாவடி வசூல்
உடல் அடக்கம் செய்ய லஞ்சம் ரூ.60,000! துக்க வீட்டிலும் அடாவடி வசூல்
ADDED : ஆக 10, 2024 12:22 AM

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், சாலை விபத்து, தற்கொலை உள்ளிட்டவற்றிலும், உடல்நல பாதிப்பில் உயிரிழப்போரையும் இறுதி அடக்கம் செய்யும் வரை, பல்வேறு இடங்களில் லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது. துக்க வீடு என்றும் பார்க்காமல், அடாவடியாக 40,000 - 60,000 ரூபாய் வசூலிக்கப்படுவதாக,பல்வேறு தரப்பினரும் வேதனை தெரிவித்துள்ளனர்.
சாலை விபத்து, தற்கொலை, சந்தேக மரணம் போன்றவற்றிற்கு பிரேத பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. அதேநேரம், கிராமப்புறங்களில் வீடுகளிலேயே உயிரிழந்தோரை மறுநாள் அடக்கம் செய்கின்றனர்.
பிரேத பரிசோதனை
அவ்வாறு உயிரிழப்போரின் மரணங்களில் சந்தேகம் ஏற்படும் போது, பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.
இப்படி பல சம்பவங்களில், கொலை செய்யப்பட்டது அம்பலத்துக்கு வந்துள்ளது. எனவே, பெரும்பாலான மரணங்களுக்கு, டாக்டர் சான்றிதழ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
அதன்படி, சென்னையில் ஒருவர், வீட்டில் உயிரிழந்தால், அருகில் உள்ள டாக்டரை அழைத்து வந்து பரிசோதித்து, இறந்து விட்டதை உறுதி செய்ய வேண்டும். இதற்காக, டாக்டருக்கு, குறைந்தபட்சம் 2,000 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.
பின், மாநகராட்சி மயான பூமிகளில், அடக்கம் அல்லது தகனம் செய்ய, 15,000 ரூபாய் முதல் 25,000 ரூபாய் வரை லஞ்சம் வழங்க வேண்டிஉள்ளது.
அப்போது தான், இறந்தோருக்கு இறுதிச்சடங்கு செய்வதற்கான அனைத்து பணிகளும் வேகமாக நடைபெறும். இல்லையென்றால், இறந்தவரின் உடலுடன் மேலும் பல மணி நேரம் காத்திருக்கும் சங்கடம் நேரிடும்.
அதேபோல், தற்கொலை, சாலை விபத்து, சந்தேக மரணம் போன்றவற்றில், இதற்கான செலவு இரண்டு மடங்குக்கு மேல் அதிகரிக்கிறது.
இதுபோன்ற சம்பவங்களில், போலீசார் வழக்கு பதிவு செய்வது, பிரேத பரிசோதனை உள்ளிட்டவை கட்டாயம்.
இறந்தவரின் உடல் பிரேத பரிசோதனை செய்ய, போலீசில் வழக்கு பதிவு செய்து, மருத்துவமனைக்கு ஒரு காவலர் நேரில் வரவேண்டும். இதற்காகவே, 5,000 ரூபாய்க்கு மேல், போலீசாருக்கே கொடுக்க வேண்டிஉள்ளது.
மேலும், சென்னையில் உள்ள அனைத்து அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளிலும் பிரேத பரிசோதனை கூடங்களில், பணியாளர்கள் முதல் பல்வேறு தரப்பினருக்கு, பல்வேறு கட்டங்களில் 6,000 ரூபாய்க்கு மேல் கொடுத்தால் மட்டுமே முறையாக உடற்கூராய்வு நடக்கும்.
இல்லையென்றால், பிரேத பரிசோதனைக்கு தாமதம் ஏற்படுவதோடு, முறையாக துணி சுற்றாமல் கூட உடலை ஒப்படைத்து விடுவர்.
மருத்துவமனையில் இருந்து, இலவச அமரர் ஊர்தியில், வீட்டிற்கு உடலை எடுத்துச் செல்லலாம். ஆனால், இதற்கும் அமரர் ஊர்தி ஓட்டுனருக்கு குறைந்தது, 1,000 ரூபாய் அளிக்கும் நிர்ப்பந்தம் உள்ளது.
மீண்டும் மயான பூமியில் இறுதிகட்ட சடங்குகளுக்கு 25,000 ரூபாய் வரை செலுத்த வேண்டும். அங்கு நடக்க வேண்டிய அனைத்து பணிகளுக்கும், தரகர் அடிப்படையில் சிலர் இருக்கின்றனர். அவர்களுக்கு மது, உணவு போன்றவை வாங்கி தருவதுடன், பணமும் கொடுக்க வேண்டும்.
எனவே, வீட்டில் ஒருவர் உயிரிழந்தால், பல்வேறு தரப்பினருக்கு, 30,000 ரூபாய் முதல், 50,000 ரூபாய் வரை லஞ்சம் கொடுத்தால் மட்டுமே, இறந்தவரின் இறுதிப்பயணம் சிரமமின்றி நடைபெறும்.
தடுக்க முடியவில்லை
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
சென்னையில் போலீசார் சான்றிதழ், அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை, அமரர் ஊர்தி, மயான பூமி என, அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது.
ஒருவர் உயிரிழந்தால் செலவின்றி இறுதி சடங்குகளை சிக்கலின்றி முடிக்கும் வகையில் பல திட்டங்கள் அமலில் உள்ளன. ஆனால், இடையில் லஞ்சம் கொடுத்தால் தான், இறந்தவரை நல்லமுறையில் அடக்கம் அல்லது தகனம் செய்ய முடிகிறது.
பணம் இல்லாதவர்கள், துக்க நிலையிலும், அடுத்தவர்களிடம் கையேந்தும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
இலவச மயான பூமிகளை பொறுத்தவரை, கவுன்சிலர்கள் மற்றும் அரசியல் கட்சியினர், தங்களது பினாமிகள் வாயிலாகவே ஒப்பந்தங்களை எடுத்துள்ளனர்.
அதனால், ஒப்பந்ததாரர்கள் மாநகராட்சியிடமும் கட்டணம் பெற்றுக்கொண்டு, பொதுமக்களிடமும் லஞ்சம் பெற்று கொள்கின்றனர். அரசியல்வாதிகள் தலையீடு காரணமாக, லஞ்சம் பெறுவதை அதிகாரிகளால் தடுக்க முடியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
சென்னை மாநகராட்சியில், ஒவ்வொரு மயான பூமியிலும் தகனம், அடக்கம் செய்யும் பணியை தனியார் ஒப்பந்தாரர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அவர்களுக்கு ஒரு உடலுக்கு, 1,700 ரூபாய் மாநகராட்சி வழங்குகிறது.
இதனால், மயான பூமியை இலவசமாக பயன்படுத்தலாம். அங்கு லஞ்சம் கேட்டால், மாநகராட்சியின் 1913 அல்லது அதிகாரிகளிடம் நேரடியாக புகார் தெரிவிக்கலாம். அவர்கள் குறித்த ரகசியம் காக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

