/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பிராட்வே பஸ் நிலையம் தற்காலிக இடமாற்றம் மூடல்? ரூ.823 கோடியில் புதுவளாகம் கட்ட திட்டம்
/
பிராட்வே பஸ் நிலையம் தற்காலிக இடமாற்றம் மூடல்? ரூ.823 கோடியில் புதுவளாகம் கட்ட திட்டம்
பிராட்வே பஸ் நிலையம் தற்காலிக இடமாற்றம் மூடல்? ரூ.823 கோடியில் புதுவளாகம் கட்ட திட்டம்
பிராட்வே பஸ் நிலையம் தற்காலிக இடமாற்றம் மூடல்? ரூ.823 கோடியில் புதுவளாகம் கட்ட திட்டம்
ADDED : ஏப் 30, 2024 11:44 PM

சென்னை :பிராட்வே பேருந்து நிலையம் 823 கோடி ரூபாயில், ஒருங்கிணைந்த மையமாக மாற்றும் பணி விரைவில் துவங்கப்பட உள்ளது. இதற்காக, தீவுத்திடலில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
சென்னையில் மிகவும் பழமையான பேருந்து நிலையமாக, பிராட்வே பேருந்து நிலையம் உள்ளது.
இங்கிருந்து தாம்பரம், சோழிங்கநல்லுார், பூந்தமல்லி, போரூர், திருவான்மியூர், கேளம்பாக்கம், கிளாம்பாக்கம், எண்ணுார், கோயம்பேடு, திருவொற்றியூர் உட்பட பல்வேறு இடங்களை இணைக்கும் வகையில், பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
தினம் 500க்கும் மேற்பட்ட பேருந்துகள், 3,000க்கும் மேற்பட்ட சர்வீஸ்களாக இயக்கப்பட்டு வருகின்றன. லட்சக்கணக்கான பயணியர் வந்து செல்கின்றனர். எனினும், பேருந்து நிலையத்தில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை.
இதற்கிடையே, மின்சார ரயில், மெட்ரோ ரயில் சேவை உள்ளிட்ட போக்குவரத்து வசதிகளுடன், வணிக வளாகங்களோடு ஒருங்கிணைந்த மையமாக பிராட்வே பேருந்து நிலையத்தை மாற்ற 823 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என, தமிழக அரசு பட்ஜெட்டில் அறிவித்தது.
இதற்கான பணிகளை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொள்ள உள்ளது. இந்த திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து, பணிகள் முடிந்துள்ளன. இந்த திட்டத்திற்கான கட்டுமான பணியை மேற்கொள்ள, நிறுவனங்களை தேர்வு செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.
இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அதிகாரிகள் கூறியதாவது:
பிராட்வேயில் தற்போதுள்ள பேருந்து நிலையத்தை 823 கோடி ரூபாயில் 'மல்டி மாடல் இன்டகிரேஷன்' எனும் ஒருங்கிணைந்த முனையமாக மாற்றப்பட உள்ளது.
மொத்தம் 4.42 ஏக்கர் பரப்பளவில் 10 மாடியில் ஒரு வணிக வளாகமும், பேருந்து நிலையத்துடன் கூடிய எட்டு மாடியில் ஒரு கட்டடமும் அமைக்கப்பட உள்ளது.
இந்த பேருந்து நிலையத்தில் இருந்து, அருகில் உள்ள மின்சார ரயில் நிலையம், மெட்ரோ ரயில் நிலையம், மேம்பால ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில், வசதிகள் ஏற்படுத்தப்படும். ஏழு இடங்களில் சிறிய மேம்பாலங்கள் அமைக்கப்படும்.
மாநகர பேருந்துகள் உள்ளே வந்து செல்ல பிரமாண்டமாக, நான்கு நுழைவாயில்கள் அமைக்கப்படும்.
நுாற்றுக்கணக்கான வாகனங்களை, ஒரே நேரத்தில் நிறுத்தும் வகையில் வாகன நிறுத்தங்கள், மின் துாக்கிகள், நகரும் படிக்கட்டுகள், ஆகாய நடைபாதை, உணவகங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் அமைக்கப்படும்.
இந்த பணிகளை மேற்கொள்ள, நிறுவனம் தேர்வு செய்யும் பணிகள் இறுதிகட்டத்தை எட்டி உள்ளன. இந்த பணிகள் முடிந்தவுடன், வரும் ஜூலையில் பணியை துவங்க உள்ளோம். அடுத்த மூன்று ஆண்டுகளில், இந்த பணிகள் முடிக்கப்படும்.
இரண்டு கட்டங்களாக இந்த பணிகள் நடக்கும். ஆரம்பத்தில் பேருந்து நிலையம் அமையும் கட்டடத்தை இரண்டு ஆண்டுகளில் கட்டி முடித்து, மீண்டும் பேருந்து நிலையம் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்.
பிராட்வேயில் இருந்து தற்போது இயக்கப்படும் மாநகர பேருந்துகள், தற்காலிமாக இடமாற்றம் செய்து இயக்க, ஒருங்கிணைந்த சென்னை பெருநகர போக்குவரத்து குழுமம் வழிகாட்டுதலோடு, சென்னை மாநகராட்சி, மாநகர போக்குவரத்து கழகம் இணைந்து மேற்கொள்ள உள்ளது.
பிராட்வே பேருந்து நிலையம், அருகே உள்ள பச்சையப்பன் விளையாட்டு மைதானம், பல்லவன் சாலை அருகே அல்லது தீவுத்திடல் அல்லது அண்ணாசாலையை ஒட்டியே வேறு ஏதாவது இடம் உள்ளதா என, ஆய்வு நடந்து வருகிறது.
எந்த இடம் என்பது குறித்து இன்னும் இறுதி செய்யப்படவில்லை. தற்காலிக பேருந்து நிலையம் குறித்து முடிவு செய்து பின்னர் அறிவிக்கப்படும்.
தீவுத்திடல் அரசு இடம் என்பதால், இங்கு தற்காலிக பேருந்து நிலையம் அமைய வாய்ப்புகள் உள்ளன. இறுதி செய்த பின்னர், கூரைகள், கழிப்பறை வசதி, நடைமேடைகள், அலுவலகங்கள் அமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். இதற்காக நிதி ஒதுக்கும் பணியும் நடந்து வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
அமைவிடம் 6.3 லட்சம் சதுர அடி (10 மாடி)
பட்ஜெட் 823 கோடி ரூபாய்
பார்க்கிங் பைக் 1,881; கார் 2,528
பயணியர் வருகை தினம் - 1 லட்சம்
500 பேருந்துகள், 75 தடம், 3,000 சர்வீஸ் (தினம்)