/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கட்டுறாங்க... கட்டுறாங்க! 8 ஆண்டாக ஒரு ரேஷன் கடை
/
கட்டுறாங்க... கட்டுறாங்க! 8 ஆண்டாக ஒரு ரேஷன் கடை
ADDED : ஜூலை 01, 2024 01:55 AM

பெரம்பூர்:திரு.வி.க.நகர் மண்டலம் 71வது வார்டில் பெரம்பூர் அருந்ததி நகர் மேட்டுப்பாளையம் பகுதி உள்ளது. 2,000க்கும் மேற்பட்டோர் வசிக்கும் இப்பகுதியில், கூலித்தொழிலாளர்களே அதிகம்.
இந்த பகுதி மக்களுக்கான ரேஷன் கடை, ஒன்றரை கிலோ மீட்டர் துாரத்தில் ஜமாலியா தெருவில் உள்ளது. அந்த கட்டடமும் பாழடைந்துள்ளது.
இதையடுத்து, கடந்த 2015ம் ஆண்டில் இருந்து, அருந்ததி நகரில், ராஜிவ்காந்தி பூங்கா அருகே உள்ள காலி இடத்தில் ரேஷன் கடை கட்டித்தரக் கோரி, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில், 2016ல் அப்போதைய மாநகராட்சி மேயர் மற்றும் மண்டல குழுவுக்கு நியாயவிலை கடை கேட்டு கடிதம் எழுதப்பட்டது.
அந்த கடிதத்திற்கு, மண்டல குழு சார்பில், 2016 மார்ச் 24ம் தேதி பதில் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. அதில், 'அங்கன்வாடி மையம் பின்புறமுள்ள இடத்தில், நியாயவிலை கட்டடம் கட்ட துவக்கப்பட்டுள்ளது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், எட்டு ஆண்டுகளான நிலையில், இன்னும் கட்டடம் எழும்பவில்லை. ரேஷன் கடை அமைய வேண்டிய இடத்தில் உரம் தயாரிப்பு மையம் கட்டப்பட்டுள்ளது.
அதுவும், சுற்றுச்சூழல் பாதிப்பு புகார் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அப்பகுதிமக்கள் கூறுகையில், 'அருந்ததியர்களாகிய எங்கள் கோரிக்கையை அரசும், பிரதிநிதிகளும் காது கொடுத்து கேட்பதில்லை. தற்போது எம்.எல்.ஏ.,விடம் கோரிக்கை வைத்துள்ளோம். எங்கள் விஷயத்தில் முதல்வர் தலையிட்டு தீர்வு காண வேண்டும்' என்றனர்.