/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
5 அடி கால்வாய் நீர் 2 அடி கால்வாயில் வழிந்தோடுமா? கவுல்பஜாரில் ஊராட்சி பொறுப்பில் விட்ட நெ.சா.துறை
/
5 அடி கால்வாய் நீர் 2 அடி கால்வாயில் வழிந்தோடுமா? கவுல்பஜாரில் ஊராட்சி பொறுப்பில் விட்ட நெ.சா.துறை
5 அடி கால்வாய் நீர் 2 அடி கால்வாயில் வழிந்தோடுமா? கவுல்பஜாரில் ஊராட்சி பொறுப்பில் விட்ட நெ.சா.துறை
5 அடி கால்வாய் நீர் 2 அடி கால்வாயில் வழிந்தோடுமா? கவுல்பஜாரில் ஊராட்சி பொறுப்பில் விட்ட நெ.சா.துறை
ADDED : செப் 07, 2024 12:30 AM
பம்மல், செப். 7-
கவுல்பஜாரில் மழைநீர் வெளியேறும் வகையில் கட்டப்படும் 5 அடி கால்வாயை, அடையாறு ஆறு வரை முழுமையாக கட்டாமல், 2 அடி கால்வாயுடன் இணைக்கப்படுகிறது. இதனால் மழைக்காலத்தில், ஊராட்சி பகுதிகள் வெள்ளத்தில் இருந்து தப்புமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மழை காலத்தில், பம்மல் ஸ்டேட் பாங்க் காலனி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வெளியேறும் மழைநீர் ஆண்டாள் நகர், மூவர் நகர், கவுல்பஜார் ஊராட்சி குடியிருப்பு வழியாக வெளியேறி, அடையாறு ஆற்றில் கலக்கும். கன மழை பெய்தால், இப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்குவது வழக்கம்.
கடந்த 2015ல் பெய்த மழையில், கவுல்பஜார் ஊராட்சி வெள்ளத்தில் மூழ்கியது. ஒவ்வொரு ஆண்டும், இப்பிரச்னை தொடர்வதால், கால்வாய் கட்டி, குடியிருப்பு பகுதியில் வெள்ளம் தேங்காத வகையில், மழைநீரை அடையாறு ஆற்றுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து, பம்மல் ஸ்டேட் பாங்க் காலனியில் இருந்து ஆண்டாள் நகர் வழியாக மூவர் நகர் வரை, 2,000 அடி துாரத்திற்கு, மூன்று கோடி ரூபாய் செலவில், கால்வாய் கட்டும் பணி, 2023, செப்டம்பரில் துவங்கியது.
இப்பணியில், பொழிச்சலுார் பிரதான சாலையில், இடையில் உள்ள மின் கம்பங்களை அகற்றாமல், பாதி பாதியாக நிறுத்தியுள்ளனர். இதனால், புதிதாக கட்டப்பட்டுள்ள கால்வாய், கழிவு நீர் தேக்கமாக மாறி, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
அடுத்த கட்டமாக, மூவர் நகர் முதல் அடையாறு ஆறு வரை 3,000 அடி துாரத்திற்கு 4.15 கோடி ரூபாய் செலவில் கால்வாய் கட்டப்பட்டுள்ளது.
இதில், கவுல்பஜார் காவல் உதவி மையத்தின் அருகே வரை கால்வாய் கட்டி முடித்து நிறுத்தி விட்டனர். அதற்கு மேல், பழைய 2 அடி கால்வாய் வழியாக, மழைநீர் செல்லும் வகையில் திட்டமிட்டுள்ளனர்.
ஆனால், 5 அடி அகலம், 5 அடி உயரம் கொண்ட கால்வாய் வழியாக வரும் மழைநீர், 2 அடி கால்வாயில் வழிந்தோட வாய்ப்பே இல்லை. இதனால், மழை காலத்தில் தண்ணீர் வெளியேறி வழக்கம் போல், கவுல்பஜார் ஊராட்சி பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலை நீடிக்கிறது.
இது குறித்து, நெடுஞ்சாலைத் துறையினர் கூறியதாவது:
நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான சாலை வரை கால்வாய் கட்டி முடித்துள்ளோம். 2 அடி கால்வாய் உள்ள சாலை, ஊராட்சி ஒன்றிய கட்டுப்பாட்டில் உள்ளது. அவர்கள், விடுப்பட்டுள்ள பகுதியில் இருந்து அடையாறு ஆறு வரை கால்வாய் கட்ட வேண்டும். ஒரு வாரத்தில், இடையில் உள்ள மின் கம்பங்கள் அகற்றப்பட்டு, கால்வாய் இணைக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.