ADDED : மே 06, 2024 01:33 AM

நங்கநல்லுார்:நங்கநல்லுார், நான்காவது பிரதான சாலையில் அமைந்துள்ளது பனச்சியம்மன் கோவில். 300 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இந்த கோவில், அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
இக்கோவிலுக்கு கடைசியாக, 2005ல் கும்பாபிஷேகம் நடந்தது. அதன் பின், பராமரிப்பு பணிகள்கூட மேற்கொள்ளவில்லை.
கடந்த ஆண்டு டிச., மாதம் புயல் மழைக்கு, கோவிலில் இருந்த, 70 ஆண்டு ஆல மரம் வேரோடு சாய்ந்தது. அதன் கிளைகள் அகற்றப்பட்டு, அப்படியே விடப்பட்டது.
மரம் விழுந்ததால், கோவிலின் ஒரு பகுதி சேதமடைந்து, கம்பிகள் பெயர்ந்துள்ளன. இதன் வழியே சென்று, கோவில் உண்டியல் மற்றும் பொருட்கள் திருடு போக வாய்ப்புள்ளது.
தவிர, சரிந்ததால் வெட்டப்பட்ட மரம் துளிர்விட ஆரம்பித்துள்ளது. இதை, அருகில் உள்ள அறநிலையத் துறை இடத்தில் நட்டு பராமரிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.