/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இணை கமிஷனர் அலுவலகத்தில் கார்கள் உடைப்பு... போலீசார் பீதி! : ஆய்வாளருக்கு மிரட்டல்; காவலர்கள் மீது தாக்குதல்
/
இணை கமிஷனர் அலுவலகத்தில் கார்கள் உடைப்பு... போலீசார் பீதி! : ஆய்வாளருக்கு மிரட்டல்; காவலர்கள் மீது தாக்குதல்
இணை கமிஷனர் அலுவலகத்தில் கார்கள் உடைப்பு... போலீசார் பீதி! : ஆய்வாளருக்கு மிரட்டல்; காவலர்கள் மீது தாக்குதல்
இணை கமிஷனர் அலுவலகத்தில் கார்கள் உடைப்பு... போலீசார் பீதி! : ஆய்வாளருக்கு மிரட்டல்; காவலர்கள் மீது தாக்குதல்
ADDED : பிப் 23, 2025 10:45 PM

சென்னையில் பாலியல் தொல்லை, போதை பொருள் கடத்தல் வழக்கில் போலீசார் சிக்கி வரும் நிலையில், வடசென்னையில், போலீஸ் இணை கமிஷனர் அலுவலகத்தில் புகுந்து கார் கண்ணாடிகள் உடைப்பு, ஆய்வாளருக்கு மிரட்டல், போலீஸ்காரரின் கால் எலும்பு முறிவு உள்ளிட்ட அடுத்தடுத்த சம்பவங்கள் அரங்கேறி உள்ளன. இதனால், 'மக்களுக்கு பாதுகாப்பு தரும் தங்களுக்கு பாதுகாப்பு இல்லையோ' என, போலீசார் அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னை, தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில், சென்னை மாநகர காவல் துறையின், வடக்கு மண்டல இணை ஆணையர் அலுவலகம் உள்ளது. அங்கு போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாரின் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
நேற்று முன்தினம், மர்ம நபர் ஒருவர் இணை ஆணையர் அலுவலகத்தில் புகுந்து போலீஸ் அதிகாரிகளின் கார்களின் கண்ணாடிகளை அடித்து உடைத்துள்ளார்.
சம்பவம் குறித்து, 'சிசிடிவி' காட்சிகளை ஆய்வு செய்து, தண்டையார்பேட்டை, ஆரணி ரங்கன் தெருவை சேர்ந்த சிதம்பர பாண்டியன், 42, என்பவரை கைது செய்துள்ளனர். ஐ.பி.எஸ்., அதிகாரி பணிபுரியும் இடத்திலேயே பாதுகாப்பு கேள்விக்குறியாக்கி இருப்பதை, இச்சம்பவம் சுட்டிக்காட்டியுள்ளது.
அடுத்ததாக, காசிமேடு காவல் நிலையத்தில், சட்ட ஒழுங்கு ஆய்வாளராக பணிபுரிபவர் வசந்தராஜா.
இவர், ஹிந்து அமைப்பினர் கொடுத்த புகாரின் அடிப்படையில், காசிமேடு, ஜி.எம்.பேட்டை அரசு குடியிருப்பு பகுதியில் நடந்துவரும் பள்ளிவாசல் கட்டுமான பணியை தற்காலிகமாக நிறுத்தினார்.
இதனால், கடந்த 21ம் தேதி, வண்ணாரப்பேட்டையில் மனிதநேய மக்கள் கட்சியின், 17ம் ஆண்டு துவங்க விழா கூட்டத்தில் பேசிய, வடசென்னை கிழக்கு மாவட்ட செயலர் அஜ்மல், இன்ஸ்பெக்டரை தரக்குறைவாக பேசி, மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து, ஆய்வாளர் வசந்தராஜா அளித்த புகாரின்படி, வண்ணாரப்பேட்டை போலீசார், அஜ்மல் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
அதேபோல், டி.ஜி.பி., அலுவலகத்தில், உளவுத்துறையான எஸ்.பி.சி.ஐ.டி.,யில் தலைமை காவலராக பணிபுரிபவர் பாலசுப்பிரமணியன், 39.
இவர், நேற்று முன்தினம் பணி முடித்து, நள்ளிரவில் கொண்டித்தோப்பு காவலர் குடியிருப்பில் உள்ள தன் வீட்டிற்குச் சென்றார்.
பாரிமுனை என்.எஸ்.சி., போஸ் சாலையில் சென்றபோது, அதிக வேகமாகச் சென்ற வட மாநில வாலிபர், பாலசுப்பிரமணியன் வாகனத்தில் மோதிவிட்டு சென்றுள்ளார்.
இவரை பாலசுப்பிரமணியன் பின் தொடர்ந்து சென்று, யானைகவுனி ஜெனரல் முத்தையா தெருவில் பிடித்து விசாரித்துள்ளார்.
அப்போது, அங்கு வந்த நபர் ஒருவர், பொதுவெளியில் ஏன் சண்டை போடுகிறீர்கள் என, கேட்டுள்ளார். இவரிடம், தலைமை காவலர் என, பாலசுப்பிரமணியன் தன்னை அறிமுகம் செய்துள்ளார்.
அப்போது, கேள்வி கேட்ட நபர், நான் வடக்கு கடற்கரை காவல் நிலைய நுண்ணறிவு காவலர் என, கூறியுள்ளார். அப்போது இருவரும் அடையாள அட்டையை கேட்டு, வாக்குவாதம் செய்து மோதிக்கொண்டனர்.
பணி முடிந்து அவ்வழியே, ஒரு பெண்ணுடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற பூக்கடை போக்குவரத்து சிறப்பு எஸ்.ஐ., ஜோசப், நுண்ணறிவு பிரிவு காவலர் மகாராஜனுடன் சேர்ந்து, பாலசுப்பிரமணியனை எட்டி உதைத்து, கீழே தள்ளினார்.
இதில், பாலசுப்பிரமணியனுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அரசு ஸ்டான்லி அரசு மருத்துவனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, தற்போது தனியார் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் குறித்து, ஜோசப், மகாராஜன் ஆகியோரிடம் யானைகவுனி போலீசார் விசாரிக்கின்றனர்.
ஏற்கனவே, சென்னை மாநகர காவல் துறையில் பணிபுரியும் போலீசார், பெண்ணுக்கு பாலியல் தொல்லை, போதை பொருள் கடத்தல், 20 லட்சம் ரூபாய் வழிப்பறி என, குற்றச்செயலில் ஈடுபட்டுள்ள நிலையில், தற்போது, போலீசாருக்கே பாதுகாப்பு இல்லாத நிலையில், இச்சம்பவங்கள் நடந்துள்ளன.
- நமது நிருபர் குழு -