/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மின்சார ரயில் மீது கல் வீசிய 3 மாணவர்கள் மீது வழக்கு
/
மின்சார ரயில் மீது கல் வீசிய 3 மாணவர்கள் மீது வழக்கு
மின்சார ரயில் மீது கல் வீசிய 3 மாணவர்கள் மீது வழக்கு
மின்சார ரயில் மீது கல் வீசிய 3 மாணவர்கள் மீது வழக்கு
ADDED : ஆக 04, 2024 12:27 AM
சென்னை, தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி, நேற்று முன்தினம் காலை, மின்சார ரயில் சென்றது. இந்த ரயிலில் பயணம் செய்த பச்சையப்பன் கல்லுாரி மற்றும் நந்தனம் கல்லுாரி மாணவர்கள், சைதாப்பேட்டை ரயில் நிலையம் அருகே, திடீரென மோதிக் கொண்டனர்.
அப்போது, ரயில் தண்டவாளத்தில் கிடந்த கற்களை எடுத்து வீசி, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இந்த தாக்குதலின் போது, ரயில் கண்ணாடிகள் உடைந்தன.
மேலும், இரு பயணியருக்கு கையில் சிறிய காயம் ஏற்பட்டது. மாணவர்கள் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் மோதிக் கொள்வதை பார்த்த பயணியர், அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
இந்த சம்பவம் குறித்து, மின்சார ரயில் ஓட்டுனர், மாம்பலம் ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு தகவல் அளித்தார்.
சம்பவ இடத்திற்கு அவர்கள் வருவதற்குள், மாணவர்கள் தப்பியோடி விட்டனர். இதையடுத்து, ரயில் நிலையத்தில் இருந்த,'சிசிடிவி கேமரா' காட்சி பதிவுகளை, போலீசார் ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து, ரயில் மீது கல் வீசி தாக்குதலில் ஈடுபட்ட, பச்சையப்பன் கல்லுாரி மாணவர்களான, குரோம்பேட்டையைச் சேர்ந்த கண்ணன், 20, தென்காசியைச் சேர்ந்த வேலவன், 20, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கரன், 19, ஆகிய மூவரை பிடித்து விசாரித்தனர். இதையடுத்து, தடை செய்யப்பட்ட ரயில்வே இடத்தில் அத்துமீறி நுழைந்து, ரயில்வே சொத்தை சேதப்படுத்தியது தொடர்பாக, அவர்கள் மீது வழக்கு பதியப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது.
பின், மாணவர்களின் பெற்றோர் வரவழைக்கப்பட்டு, கடும் எச்சரிக்கைக்குப் பின், அவர்கள் மூவரும் விடுவிக்கப்பட்டனர்.