/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னை 'காக்னிசன்ட்' வளாகம் ரூ.800 கோடிக்கு கை மாறுகிறது
/
சென்னை 'காக்னிசன்ட்' வளாகம் ரூ.800 கோடிக்கு கை மாறுகிறது
சென்னை 'காக்னிசன்ட்' வளாகம் ரூ.800 கோடிக்கு கை மாறுகிறது
சென்னை 'காக்னிசன்ட்' வளாகம் ரூ.800 கோடிக்கு கை மாறுகிறது
ADDED : ஆக 31, 2024 12:28 AM

சென்னை, தகவல் தொழில்நுட்ப துறையில் பிரபலமாக உள்ள,'காக்னிசன்ட்' நிறுவனத்தின் சென்னை தலைமையக வளாகம், விரைவில் கைமாற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை, ஓ.எம்.ஆர்., எனப்படும் பழைய மாமல்லபுரம் சாலையில், பல்வேறு தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்படுகின்றன. இதில், காக்னிசன்ட் நிறுவனம் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.
தகவல் தொழில்நுட்ப துறை பொறியாளர்களுக்கு, அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்பு, இந்நிறுவனம் வாயிலாக கிடைத்து வருகிறது. ஓ.எம்.ஆர்., சாலையில், ஒக்கியம் துரைப்பாக்கத்தில் இதன் சென்னை தலைமையகம் அமைந்துள்ளது.
இந்த வளாகத்தில், அடுக்குமாடி கட்டடங்கள் கட்டப்பட்டு, இந்நிறுவனத்தின் பல்வேறு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. இருப்பினும், இந்நிறுவனத்தின் சார்பில், சென்னையில் பல்வேறு இடங்களில் கிளை வளாகங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
இந்நிலையில், ஒக்கியம் துரைப்பாக்கத்தில் உள்ள தலைமையகத்தை சென்னை தாம்பரம், 'மெப்ஸ்' வளாகத்திற்கு மாற்ற, இந்நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதையடுத்து, இந்த வளாக நிலத்தை விற்பனை செய்ய, காக்னிசன்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து, ரியல் எஸ்டேட் சொத்து மதிப்பீட்டாளர்கள் கூறியதாவது:
ஒக்கியம் துரைப்பாக்கத்தில், காக்னிசன்ட் நிறுவனம் உள்ள நிலம், 15 ஏக்கர் என மதிப்பிடப்பட்டு உள்ளது. இந்த நிலத்தை விற்கும் பணிக்கு, தனியார் ரியல் எஸ்டேட் விற்பனை நிறுவனம் ஒன்றை, இதன் நிர்வாகம் அணுகி உள்ளது. இந்நிறுவனம் வாயிலாக, காக்னிசன்ட் இடம் விற்பனை செய்யப்படும் எனத் தெரிகிறது. ஆரம்ப நிலையில், 800 கோடி ரூபாய் வரை இந்த சொத்து விலை போகும் என்ற அடிப்படையில், பேச்சு நடந்து வருகிறது.
சென்னையில் பிரபலமான, இரண்டு தனியார் கட்டுமான நிறுவனங்கள், இந்த இடத்தை வாங்க போட்டி போடுவதாக கூறப்படுகிறது. விரைவில் இது தொடர்பான விற்பனை பேச்சு முடிவுக்கு வரும் எனத் தெரிகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.