/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஒருமையில் பேசிய கலெக்டர் ஆசிரியர்கள் போராட்டம்
/
ஒருமையில் பேசிய கலெக்டர் ஆசிரியர்கள் போராட்டம்
ADDED : ஜூலை 02, 2024 12:06 AM

திருவள்ளூர்,திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், கடந்த 29ம் தேதி, பொதுத்தேர்வில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பில் 60 சதவீதத்திற்கும் குறைவாக தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்ற கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
கலெக்டர் பிரபுசங்கர் தலைமை வகித்தார்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் மாவட்டத்தில் உள்ள 24 அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்கள், இளநிலை ஆசிரியர்கள் என, 150 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், தேர்ச்சி சதவீதம் குறித்து விவாதிக்கப்பட்டு, குறைவான தேர்ச்சி சதவீதம் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு, கலெக்டர் ஆலோசனை வழங்கினார்.
அப்போது தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களை, கலெக்டர் ஒருமையில் பேசியுள்ளார்.
தொடர்ந்து 'என்னை ஒன்றும் செய்ய முடியாது, ஜாக்டோ - ஜியோ அமைப்பில் கூறுங்கள், அமைச்சரிடம் கூறுங்கள், அதிகபட்சமாக என்னை இடமாற்றம் செய்வார்கள். நான் மாறுதல் பெற தயாராக உள்ளேன்'எனக் கூறியுள்ளார்.
இதையடுத்து கலெக்டரை கண்டிக்கும் வகையில், ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு ஆசிரியர்கள், திருவள்ளூர் மாவட்டம் முழுதும் நேற்று முதல் வரும் 5ம் தேதி வரை, கருப்பு 'பேட்ஜ்' அணிந்து பணி மேற்கொள்வதாக தெரிவித்து உள்ளனர்.
அதன்படி நேற்று, திருவள்ளூரில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்து பணி செய்தனர்.
மாவட்ட நிர்வாகம், ஆசிரியர்களை அழைத்து பேசி, பிரச்னைக்கு சுமுக தீர்வு காண வேண்டுமென, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.