ADDED : மார் 04, 2025 08:45 PM
சென்னை:மடிப்பாக்கம், நியூ குபேரன் நகரை சேர்ந்தவர் குமார். இவரது மகள் சஹானா, 20. இவர், பூந்தமல்லி, வரதராஜபுரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரியில், பி.டெக்., படித்து வருகிறார்.
கல்லுாரிக்கு செல்வதாக கூறி சென்றவர், மாலை வீடு திரும்பவில்லை. அவரின் மொபைல் போனை தொடர்பு கொண்டபோது, அது 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது.
இதையடுத்து, கல்லுாரி மற்றும் உறவினர் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் தேடியும், சஹானா கிடைக்கவில்லை.
இதையடுத்து, மகளை காணவில்லை என, அவரது பெற்றோர் மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இது குறித்து, போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். முதல் கட்ட விசாரணையில், சஹானாவுக்கும் கல்லுாரி பேருந்து ஓட்டுனருக்கும் பழக்கம் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அந்த நபரை தொடர்பு கொள்ள முயன்றபோது, அவரின் மொபைல் போனும், 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து, இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.