/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பல இடங்களில் தி.மு.க.,வினர் அத்துமீறல் ஓட்டுச்சாவடியை கைப்பற்றியதாக புகார்
/
பல இடங்களில் தி.மு.க.,வினர் அத்துமீறல் ஓட்டுச்சாவடியை கைப்பற்றியதாக புகார்
பல இடங்களில் தி.மு.க.,வினர் அத்துமீறல் ஓட்டுச்சாவடியை கைப்பற்றியதாக புகார்
பல இடங்களில் தி.மு.க.,வினர் அத்துமீறல் ஓட்டுச்சாவடியை கைப்பற்றியதாக புகார்
ADDED : ஏப் 20, 2024 12:13 AM

சென்னை, திருவல்லிக்கேணி 119வது வார்டு, 175, 176 ஆகிய ஓட்டுச்சாவடிகளில் பா.ஜ., சார்பில் பூத் முகவர்கள் அமர்ந்திருந்தனர். அங்கு, காலையிலேயே தி.மு.க.,வினர் சிலர் வந்து, பா.ஜ., பூத் முகவர்களை வெளியேறும்படி தகராறில் ஈடுபட்டனர்.
அங்கு வந்த போலீசார், அனுமதி பெற்ற பூத் முகவர்களை தவிர்த்து, ஓட்டுச்சாவடிக்குள் யாருக்கும் அனுமதியில்லை என, தி.மு.க.,வினரை வெளியேற்றினர்.
நேற்று மாலை 5:30 மணிக்கு திருவல்லிக்கேணி, ராம்நகர் ஆரம்ப பள்ளி ஓட்டுச்சாவடிக்குள் தி.மு.க.,வினர் அத்துமீறி நுழைந்ததாக புகார் எழுந்தது.
தகவலறிந்து மத்திய சென்னை பா.ஜ., வேட்பாளர் வினோஜ் செல்வம் அங்கு வந்தார். புகார் தெரிவிக்கப்பட்டு, கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர். இதையடுத்து, தி.மு.க.,வினர் அங்கிருந்து சென்றனர்.
அதேபோல், தென்சென்னை தொகுதி, மயிலாப்பூர், மூப்பனார் பாலம் அருகில் உள்ள ஓட்டுச்சாவடிக்குள் தி.மு.க.,வினர் அத்துமீறி நுழைந்ததாக, பா.ஜ., கட்சியினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் அங்கு வரவழைக்கப்பட்டதை தொடர்ந்து அவர்களுடன் தி.மு.க.,வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தி.மு.க.,வினரை போலீசார் எச்சரித்து வெளியேற்றினர்.
தென்சென்னைக்கு உட்பட்ட மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள 177வது சி.எஸ்.ஐ., பள்ளியின் ஓட்டுச்சாவடிக்குள், நேற்று காலை தி.மு.க.,வைச் சேர்ந்த துரை மற்றும் கவுன்சிலர் கமலா செழியன் ஆகியோர், அத்துமீறி உள்ளே நுழைந்தனர்.
அங்கிருந்த பாதுகாப்பு போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி, ஓட்டுச்சாவடிக்குள் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள பூத் முகவர்கள் மட்டுமே வர முடியும் என கறாராக கூறி, அவர்களை வெளியே அனுப்பினர்.
தேனாம்பேட்டை கணபதி காலனி மூன்றாவது தெரு பகுதியில் ஓட்டுச்சாவடியை கைப்பற்றி, கள்ள ஓட்டு போட்டதாக அ.தி.மு.க.,வினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்நிலையில், மயிலாப்பூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட 13வது ஓட்டுச்சாவடியை கைப்பற்றி, முறைகேடு நடத்தப்பட்டுள்ளதாக, தென்சென்னை அ.தி.மு.க., வேட்பாளர் ஜெயவர்தன் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக, தமிழக தேர்தல் கமிஷனுக்கு அவர், அவசர கடிதம் அனுப்பி உள்ளார். அந்த ஓட்டுச்சாவடியில் தி.மு.க.,வினர் அத்துமீறி ஓட்டுச்சாவடியை கைப்பற்றியதை உறுதி செய்யும் வகையில், அங்கு பதிவான வீடியோ பதிவுகளை தங்களிடம் ஒப்படைக்க கோரியுள்ளார். மேலும், அங்கு மறுதேர்தல் நடத்தவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
அதேபோல், சென்னை, பல்லவன் சாலை அருகில் உள்ள ஓட்டுச்சாவடியில் நேற்று மதியம் 2:00 மணியளவில், நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர் ஓட்டளிக்க சென்றார். ஆனால், ஓட்டளித்தபோது, இயந்திரத்தில் ஒலி கேட்கவில்லை என, கட்சியின் பூத் முகவர் மற்றும் தொண்டர்களிடத்தில் கூறினார்.
இதையடுத்து அக்கட்சியினர், பல்லவன் சாலை அருகில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார், 15க்கும் மேற்பட்டோரை கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். தகவல் கிடைத்து, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் அங்கு வந்தனர்.
வேட்பாளர் கார்த்திகேயன் கூறியதாவது:
மைக் சின்னம் வேலை செய்யவில்லை. உதயசூரியன் சின்னம் அழுத்தியபோது வேலை செய்கிறது. இது குறித்து நாங்கள் தேர்தல் அதிகாரியிடம் கேட்டபோது, ஒருவழியாக டெஸ்ட் ஓட்டு போடுவதற்கு அனுமதி அளித்தனர்.
ஆனால் ஓட்டுச்சாவடிக்குள் நுழைந்து தி.மு.க.,வினர் எங்களிடம் தகராறில் ஈடுபட்டனர். அவர்கள் அராஜகம் செய்தனர். ஆனால் போலீசார் எங்கள் கட்சியினரை கைது செய்துனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
கைது செய்யப்பட்டவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர். இதற்கிடையே, இப்பிரச்னை தொடர்பாக விசாரிக்கப்பட்டதில், எந்த தவறும் நடக்கவில்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.

