/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தொழுவம் இல்லாத உரிமையாளர்களின் மாடுகள் பறிமுதல்: மாநகராட்சி
/
தொழுவம் இல்லாத உரிமையாளர்களின் மாடுகள் பறிமுதல்: மாநகராட்சி
தொழுவம் இல்லாத உரிமையாளர்களின் மாடுகள் பறிமுதல்: மாநகராட்சி
தொழுவம் இல்லாத உரிமையாளர்களின் மாடுகள் பறிமுதல்: மாநகராட்சி
ADDED : மே 21, 2024 12:27 AM
சென்னை, சென்னையில், மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப, கால்நடைகளின் பெருக்கமும் அதிகரித்து உள்ளது. குறிப்பாக, பசும்பாலுக்காக மாடுகள் வளர்ப்போர் அதிகரித்து வருகின்றனர்.
அவ்வாறு மாடுகளை வளர்ப்போர், மாடுகளுக்கான தொழுவம் இல்லாமல், சாலையோரங்கள், கூவம், அடையாறு ஆற்றோரங்களில் பராமரித்து வருகின்றனர். சிலர், சாலையிலும், சந்தை பகுதியிலும் மாடுகளை திரிய விடுகின்றனர். இதனால், அவ்வப்போது மாடுகள், மனிதர்களை முட்டுவதால் உயிரிழப்பு மற்றும் விபத்து சம்பவங்களும் நடந்துள்ளன.
இந்த நிலையில், மாடுகளை வளர்ப்போர், முறையாக அவற்றை பராமரிக்கும் வகையில், மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, உரிமையாளர் வீடுகளிலேயே தொழுவம் ஏற்படுத்தி கொள்ள மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது.
இது குறித்து, மாநகராட்சி கால்நடைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
சென்னை மாநகராட்சியில், சாலையில் திரிய விடப்படும் மாடுகளை பிடித்து அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அத்துடன், மாடுகளை முறைப்படுத்த, உரிமையாளர் வீட்டில் மாடுகளுக்கான இடவசதி, தண்ணீர் வசதி உள்ளிட்டவை இருக்கும் பட்சத்தில், தொழுவத்திற்கான அனுமதி அளிக்கப்படும்.
அவ்வாறு இல்லாத மாட்டு உரிமையாளர், வேறு ஏதேனும் ஒரு பகுதியில் வாடகையிலாவது மாட்டு தொழுவம் அமைக்க வேண்டும். இல்லையென்றால், மாடுகள் பறிமுதல் செய்யப்படும்.
தொழுவத்திற்கான உரிமம் பெறுவதற்கான நடைமுறை, ஜூன் அல்லது ஜூலை மாதம் முதல் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

