/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
எம்.ஜி.ஆர்., நகர் நகர்ப்புற வாரிய குடியிருப்பு 3 ஆண்டுகளாக கிடப்பில் கட்டுமான பணி
/
எம்.ஜி.ஆர்., நகர் நகர்ப்புற வாரிய குடியிருப்பு 3 ஆண்டுகளாக கிடப்பில் கட்டுமான பணி
எம்.ஜி.ஆர்., நகர் நகர்ப்புற வாரிய குடியிருப்பு 3 ஆண்டுகளாக கிடப்பில் கட்டுமான பணி
எம்.ஜி.ஆர்., நகர் நகர்ப்புற வாரிய குடியிருப்பு 3 ஆண்டுகளாக கிடப்பில் கட்டுமான பணி
ADDED : செப் 10, 2024 12:35 AM

வியாசர்பாடி, செப். 10-
வியாசர்பாடி, எம்.ஜி.ஆர்.நகர் வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகள், 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இங்கு, 'ஏ, பி, சி, டி, இ' பிளாக்குகளில், 180 குடியிருப்புகளில் 500க்கும் மேற்பட்டோர் வசித்தனர். இக்கட்டடம் பாழடைந்து, அபாயகரமாக இருந்தது.
அந்த வீடுகளை இடித்து, புதிய கட்டடங்கள் கட்ட நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் முடிவெடுத்தது. புதிதாக, 45 கோடி ரூபாய் செலவில், 288 வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டது.
தரைத்தளத்துடன் ஐந்து மாடிகள் அமைய உள்ள இக்கட்டடத்தில், ஒரு வீடு 400 சதுரடியில் பல்வேறு வசதிகளுடன் அமைய உள்ளதாக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து கடந்த 2020ல், குடியிருப்புவாசிகளுக்கு கருணைத் தொகையாக தலா 8,000 ரூபாயும், ஒதுக்கீட்டு ஆணையும் வழங்கப்பட்டது.
பின், 2021 பிப்ரவரி பழைய குடியிருப்புகள் இடிக்கப்பட்டன. வீடுகள் இடிக்கப்பட்டு மூன்றரை ஆண்டுகளாகியும், இதுவரை கட்டுமான பணிகள் துவக்கப்படவில்லை. இதனால், மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள், ஆறு மாதத்திற்குள் கட்டுமான பணிகள் துவங்குவதாக தெரிவித்தனர். மூன்றரை ஆண்டுகளாகியும், இதுவரை அடித்தளம் கூட அமைக்கப்படவில்லை. ஏழ்மை காரணமாக, வாடகை செலுத்த முடியாமல் தவிக்கிறோம்.
- பார்த்திபன்,
குடியிருப்புவாசி
கடந்த 2022ல் எம்.ஜி.ஆர்., நகர் குடியிருப்பு கட்டுமான பணிகள் துவக்கி வைத்து, விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி அடிக்கல் நாட்டினார். இது குறித்து அமைச்சர் சேகர்பாபு, பெரம்பூர் எம்.எல்.ஏ., ஆர்.டி.சேகர், கலெக்டர் அலுவலகம், முதல்வர் தனிப்பிரிவு உள்ளிட்டவற்றில் மனு கொடுத்துள்ளோம். இதுவரை தீர்வு கிடைக்கவில்லை.
- உஷா,
குடியிருப்புவாசி
கடந்த நான்கு ஆண்டுகளாக வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். எங்களுடைய வேதனை உங்களுக்கு எப்படி தெரிகிறது? மனு அளித்தும், மறியல் நடத்தியும் சோர்ந்து விட்டோம். ஏழைகள் மீது உதவி செய்ய அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் முன்வர வேண்டும்.
- சுகந்தி,
குடியிருப்புவாசி
பழைய ஒப்பந்தத்தில் சில இழுப்பறி நீடித்து வந்த நிலையில், அதற்கு தீர்வு காணப்பட்டுள்ளது. தற்போது, 45 கோடி ரூபாய் மதிப்பில், 268 குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன. இதன் வாயிலாக, பழைய ஒப்பந்தத்தில், 20 வீடுகள் குறைக்கப்பட்டுள்ளன. இதற்கு, அக்., 15ம் தேதி மறு ஒப்பந்தம் விடப்பட உள்ளது.
- உயரதிகாரி,
நகர்ப்புற மேம்பாடு வாரியம்

