/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காஞ்சி - ஸ்ரீபெரும்புதுார் மையங்களில் வாக்குவாதம்
/
காஞ்சி - ஸ்ரீபெரும்புதுார் மையங்களில் வாக்குவாதம்
ADDED : ஜூன் 05, 2024 12:30 AM

காஞ்சிபுரம் லோக்சபா தனி தொகுதிக்கான ஓட்டு எண்ணும் மையம், பொன்னேரிக்கரை அண்ணா பொறியியல் கல்லுாரி வளாகத்தில் நேற்று நடந்தது.
ஓட்டு எண்ணிக்கை மையத்தின் உள்ளே செல்ல, அரசு பணியாளர்கள் அனைவரும், கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
அரசு அதிகாரிகள், முகவர்கள் மற்றும் பத்திரிகையாளர் என, தனித்தனியாக நுழைவாயில் அமைத்து, அதன் வழியாக வரவைத்து அடையாள அட்டை காட்டிய பின் சோதனை செய்யப்பட்டு, அதன் பிறகே அனுமதிக்கப்பட்டனர்.
ஓட்டு எண்ணும் மையத்தில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் 'சீல்' அகற்றப்பட்டு, ஓட்டு விபரங்களை பார்க்கும் போது, அவை சரிவர இயங்காததால், கட்சியினர், அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
ஓட்டு எண்ணும் மையத்தில் தயாராக இருந்த 'பெல்' நிறுவன பொறியாளர்கள், உடனடியாக வரவழைக்கப்பட்டு, இயந்திரத்தின் பேட்டரி மாற்றப்பட்ட பின், இயந்திரங்கள் இயங்கின. இதனால், சிறிது நேர தாமதத்திற்கு பின் ஓட்டு எண்ணும் பணி துவங்கியது.
ஓட்டு எண்ணும் பணியை புகைப்படம் எடுக்க, கேமராவுடன் சென்ற நாளிதழ் புகைப்படக்காரர்களை, மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் அனுமதிக்க மறுத்து, வெளியே செல்லுமாறு கூறினார். இதனால், புகைப்படக்காரர்களுக்கும், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ஓட்டு எண்ணும் அறையில், பெரிய அளவிலும், சிறிய அளவிலும் என, மின் விசிறிகள் அமைக்கப்பட்டிருந்த போதும், காற்றோட்டம் இல்லாததால், அதிக வெப்ப நிலை காரணமாக, குறிப்பெடுக்க கையில் வைத்திருந்த நோட்டு, காகிதம் மூலம் விசிறிக்கொண்டனர்.
போதிய காற்று வசதியில்லாததால், அரசு ஊழியர்கள், கட்சி முகவர்கள், தேர்தல் அதிகாரிகள், போலீசார், எல்லை பாதுகாப்பு படையினர் என, அனைத்து தரப்பினரும் சிரமத்திற்குள்ளாகினர்.
ஓட்டு எண்ணும் வளாகத்தில், காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை சார்பில், மருத்துவ உதவி மையம் அமைக்கப்பட்டு இருந்தது. இதில், உடல் சுகவீனம் ஏற்பட்ட தேர்தல் ஊழியர்களுக்கு, மருத்துவ குழுவினர் மருத்துவ சிகிச்சை அளித்து, நோயின் தன்மைக்கேற்ப மருந்து, மாத்திரை வழங்கினர்.
நிருபர்களுக்கு என ஒதுக்கப்பட்ட அறையில், தேர்தல் ஊழியர்கள் ஓய்வு எடுத்தனர். அவர்களை போலீசார் வெளியேற்றினர்.
ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதிக்கான ஓட்டு எண்ணும் மையம், குரோம்பேட்டை எம்.ஐ.டி., கல்லுாரியில் நடந்தது. அம்மையத்தில் நடந்த குளறுபடி உள்ளிட்டவை குறித்து கீழே தொகுக்கப்பட்டுள்ளது.
நிருபர்களிடம் அடாவடி: நிருபர்களை ஓர் அறையில் அடைத்த அதிகாரிகள், அவர்கள் வெளியே செல்வதற்குக்கூட விடவில்லை. குறிப்பாக, இயற்கை உபாதைகளை கழிக்கக்கூட வெளியே விடாமல், போலீசார் அராஜகப்போக்குடன் செயல்பட்டனர். பொறுமை இழந்த நிருபர்கள், போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், பரபரப்பு நிலவியது.
வெளியேற்றம்: நிருபர்கள் அறையில், இருக்கைகள் மட்டுமே போடப்பட்டிருந்தன; போதிய டேபிள் இல்லை. தபால் ஓட்டு எண்ணுவதை போட்டோ எடுக்க அனுமதிக்காததால், கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. புகைப்படம் எடுக்க முயன்றவர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.
முகவர்கள் ஆர்வம்: ஓட்டு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள், முகவர்கள், அதிகாரிகள் ஆகியோர், நிருபர்கள் அறையில் வைக்கப்பட்டிருந்த அறைக்கு அவ்வப்போது வந்து, கட்சிகளின் முன்னிலை நிலவரங்களை ஆர்வத்துடன் பார்த்து சென்றனர்.
வசதிகள் குறைவு: முகவர்களுக்கு இருக்கை வசதி இல்லாததால், தரையில் அமர்ந்து, ஓட்டு எண்ணுவதை பார்வையிட்டனர். குடிநீர் வசதியில்லை; கழிப்பறை வசதி இல்லாததால், திறந்த வெளியில் இயற்கை உபாதைகளை கழித்தனர்.
காவலர் மயக்கம்: ஸ்ரீபெரும்புதுார் தொகுதி, ஓட்டு எண்ணும் மையமான குரோம்பேட்டை எம்.ஐ.டி., கல்லுாரி நுழைவாயிலில், பணியில் இருந்த பெண் காவலர் செல்வபிரியா திடீரென மயக்கமடைந்து விழுந்தார்.
- நமது நிருபர் குழு -