/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கூவம் ஆக்கிரமிப்பு: அறிக்கை தர உத்தரவு
/
கூவம் ஆக்கிரமிப்பு: அறிக்கை தர உத்தரவு
ADDED : ஆக 11, 2024 01:31 AM
சென்னை:கோயம்பேடு அருகே, 10 அடி வரை கூவம் ஆற்றங்கரையோரம் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு, தமிழக அரசுக்கு தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
'மழைக் காலங்களில் தண்ணீர் வெளியேற வழியின்றி, சென்னை மாநகரம் தத்தளித்து வருகிறது.
இந்நிலையில், கோயம்பேடு அருகே கூவம் ஆற்றங்கரையில், 10 அடி அளவுக்கு மணல், குப்பையை கொட்டி, நில ஆக்கிரமிப்பாளர்கள் சமன்படுத்தி உள்ளனர்.
இதற்காக, மணல் அள்ளும் இயந்திரங்களையும் பயன்படுத்தி உள்ளனர்.
இதை தடுக்க, சம்பந்தப்பட்ட எந்த அதிகாரியும் நடவடிக்கை எடுக்கவில்லை.
விதிகளின்படி, ஆறுகளின் கரையில் இருந்து 15 மீட்டர் இடைவெளியில், பாதுகாப்பு மண்டலம் அமைக்க வேண்டும். ஆனால், இந்த பாதுகாப்பு மண்டல பகுதியிலேயே மணல், குப்பையை கொட்டியுள்ளனர்' என, நாளிதழ்களில் செய்தி வெளியானது.
அதன் அடிப்படையில், தாமாக முன்வந்து வழக்கு பதிந்து விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர், 'கோயம்பேடு அருகே கூவம் நதி, நில ஆக்கிரமிப்பாளர்களால் ஆக்கிரமிக்கப்படுவது குறித்து, சென்னை நதிகள் மீட்பு அறக்கட்டளை, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், நீர்வளத் துறை, தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையம், சென்னை கலெக்டர் ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை, வரும் 30ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

