ADDED : மே 29, 2026 11:22 PM
பெண்ணிடம் அத்துமீறியவர் கைது
துரைப்பாக்கம்: துரைப்பாக்கத்தில் சில நாட்களுக்கு முன், 26 வயது ஐ.டி., பெண் ஊழியர் அதிகாலையில் நடந்து சென்றார். அப்போது, ‘ஹெல்மெட்’ அணிந்து பைக்கில் வந்த நபர், அப்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். துரைப்பாக்கம் போலீசாரின் விசாரணையில், திருவண்ணாமலையைச் சேர்ந்த பாபு, 40, என்பதும், தனியார் வாகன சேவை நிறுவனத்தில் ஓட்டுநராக பணிபுரிவதும் தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
***
முடிச்சூரில் 10 சவரன் நகை திருட்டு
முடிச்சூர்: முடிச்சூர், ஸ்ரீராம் நகர், சண்முக சுந்தரம் தெருவைச் சேர்ந்தவர் விஜயகுமார், 30; ‘ஏசி’ மெக்கானிக். நேற்று மகனின் பள்ளி சேர்க்கை விஷயமாக, விஜயகுமார் குடும்பத்துடன் தாம்பரம் சென்றிருந்தார். மதியம் திரும்பி வந்தபோது, வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, 10 சவரன் நகைகள் திருடப்பட்டது தெரியவந்தது. இது குறித்து பீர்க்கன்காரணை போலீசார் விசாரிக்கின்றனர்.
***
காயங்களுடன் ஆண் உடல் மீட்பு
பனையூர்: சென்னை, கிழக்கு கடற்கரை சாலை, பனையூர் அருகே காலி நிலத்தில், உடல் முழுதும் ரத்த காயங்களுடன், 40 வயது ஆண் உடலை போலீசார் மீட்டனர். அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில், கானத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
***
விஷ வாயு தாக்கி தொழிலாளி பலி
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் சிப்காட் பகுதியில் இயங்கும் ‘யுனைடெட் இண்டஸ்ட்ரீஸ் பிளாஸ்டிக் பிரைவேட் லிமிடெட்’ எனும் தொழிற்சாலையில், உற்பத்தியின் போது வீணாகும் பெயின்ட் மற்றும் ரசாயன கழிவுகள், 40 அடி ஆழ தொட்டியில் தேக்கி வைக்கப்படுகிறது. கடந்த 19ம் தேதி ஒப்பந்த ஊழியர்களான விக்னேஷ், 20, மதன்ராஜ், 22, ஆகியோர் தொட்டியில் இறங்கி துாய்மை பணி மேற்கொண்டனர். அப்போது விஷ வாயு தாக்கி மயக்கமடைந்தனர். அவர்களை காப்பாற்ற இறங்கிய மணிகண்டன், ஸ்ரீதர் ஆகியோரும் மயக்கம் அடைந்தனர். நான்கு பேரும் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மூவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். விக்னேஷ் நேற்று உயிரிழந்தார். ஸ்ரீபெரும்புதுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
