ADDED : ஜூலை 03, 2026 08:20 PM
உதவி ஆய்வாளர் மீது தாக்குதல்
ஆலந்துார்: ஆலந்துார், வடக்கு ராஜா தெருவில் காவலர் குடியிருப்பைச் சேர்ந்தவர் துரைராஜ், 38; லஞ்ச ஒழிப்பு துறை சப் – -இன்ஸ்பெக்டர்.
பரங்கிமலை சுரங்க நடைபாதையில் நேற்று முன்தினம் இரவு நடந்து சென்ற துரைராஜை, மர்ம நபர்கள் மூவர் வழிமறித்து தாக்கி, அவரது மொபைல் போன், பணம் பறிக்க முயன்றனர். துரைராஜ் சத்தம் கேட்டு பொதுமக்கள் வரவும், மூவரும் தப்பினர். இதுகுறித்து ஆதம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
போதை பொருள் தயாரித்த கும்பல் கைது
மாதவரம்: மாதவரம், சின்ன ரவுண்டானா அருகே ஆட்டோவில் வந்த அதே பகுதி சதீஷ், 38, காளிதாஸ், 42, ரோஹித் பாண்டே, 27, ஆகியோரை, மாதவரம் போலீசார் பிடித்தனர்.
இவர்கள் மாவா உள்ளிட்ட போதை பொருட்களை வீட்டில் தயாரித்து, சென்னையில் கட்டடப் பணியில் ஈடுபடும் வடமாநிலத்தவர்களுக்கு விற்பனை செய்வது தெரியவந்தது.
மூவரையும் கைது செய்த போலீசார், ஆட்டோ, 70,000 ரூபாய் மதிப்புள்ள, 20 கிலோ மாவா மற்றும் மூலப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
