ADDED : ஜூலை 10, 2026 08:30 PM
‘குட்கா’ விற்ற பெண் உட்பட 4 பேர் கைது
திருவல்லிக்கேணி: திருவல்லிக்கேணி டாக்டர் பெசன்ட் சாலையில் உள்ள பெட்டிக்கடையில், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட முனீர்ஷெரிப், 38, முகமது மஹ்தப், 32 ஆகிய இருவரை கைது செய்து, 14.1 கிலோ குட்கா பொருட்களை ஐஸ்ஹவுஸ் போலீசார் நேற்று காலை பறிமுதல் செய்தனர்.
அதேபோல், எஸ்பிளனேடு போலீசார் ஜெயலட்சுமி, 49 என்பவரை கைது செய்து, 9.6 கிலோ மாவா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும், நீலாங்கரை போலீசார், தன்ராஜ், 43 என்பவரை கைது செய்து, 1.2 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
கஞ்சா விற்ற 4 பேர் சிக்கினர்
மாதவரம்: மாதவரம், பால்பண்ணை அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மாதவரத்தைச் சேர்ந்த மரியஜான்சன், 24, கொடுங்கையூரைச் சேர்ந்த ஷெல்டன் ஜான் ஷாம், 37, மாதவரம் பால்பண்ணையைச் சேர்ந்த ஹேமந்த்குமார், 21, ஆகிய மூவரை, மாதவரம் பால்பண்ணை போலீசார் நேற்று கைது செய்து, 1.2 கிலோ கஞ்சா, ஒரு பைக், மூன்று மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்கள் அளித்த தகவலின்படி, அண்ணாநகர் சென்ற போலீசார், அங்கு பரூக், 30 என்பவரை கைது செய்து, 2.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
திருமணத்திற்கு மறுத்த வாலிபர் கைது
கோயம்பேடு: கோயம்பேடு, சின்மயா நகரைச் சேர்ந்த ஐ.டி., ஊழியரான 25 வயது இளம்பெண்ணும், சிட்லப்பாக்கத்தைச் சேர்ந்த தமிழரசன், 25, என்பவரும் காதலித்து வந்துள்ளனர். திருமண ஆசைகாட்டி, தமிழரசன் அப்பெண்ணுடன் தனிமையில் இருந்துள்ளார். இந்த நிலையில், தமிழரசன் அப்பெண்ணிடம் பேசாமலும், திருமணம் செய்யாமல் ஏமாற்றியும் வந்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்படி, கோயம்பேடு அனைத்து மகளிர் போலீசார் விசாரித்து, தமிழரசனை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
மூதாட்டியை தாக்கிய வாலிபருக்கு ‘காப்பு’
பெரம்பூர்: பெரம்பூர், ரமணா நகரைச் சேர்ந்தவர் உஷா, 60. கடந்த 8ம் தேதி வீட்டருகே உள்ள கடையில் வடை வாங்கி சாப்பிட்டுள்ளார். வடை புளிப்பாக இருந்ததால், ‘புளித்த மாவில் வடை போடாதீர்கள்’ என, உஷா கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த வடை கடை உரிமையாளரின் மகன் ராமன், உஷாவை தகாத வார்த்தையால் பேசி கை மற்றும் கல்லால் தாக்கி, கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார். இது குறித்து விசாரித்த செம்பியம் போலீசார், பெரம்பூரைச் சேர்ந்த ராமன், 30 என்பவரை கைது செய்தனர்.
வீடு புகுந்து திருடிய திருநங்கை கைது
ஓட்டேரி: ஓட்டேரி, பிரிக்ளின் சாலை பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ், 29. கடந்த 26ம் தேதி மதியம், இவரது வீட்டில் பீரோவில் இருந்த 12.5 சவரன் நகைகள் திருடு போனது. இது குறித்த புகாரை அடுத்து, தலைமை செயலக குடியிருப்பு போலீசார் விசாரித்தனர். இதில், திருட்டில் ஈடுபட்டது ஓட்டேரியைச் சேர்ந்த திருநங்கை ராஜா என்கிற ரதி, 45, என்பதும், கள்ளச்சாவி மூலம் வீட்டின் பூட்டை திறந்து திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர் மீது ஏற்கனவே ஆறு குற்ற வழக்குகள் உள்ளன.
போதையில் 15 வயது சிறுவன் தற்கொலை
கொரட்டூர்: கொரட்டூரைச் சேர்ந்த 15 வயது சிறுவன், மது மற்றும் கஞ்சா போதைக்கு அடிமையாகியுள்ளார். இதனால், அவ்வப்போது உடல் உபாதைகளால் அவதியடைந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், மது போதையில், நேற்று முன்தினம் மாலை துாக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். கொரட்டூர் போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.
