ADDED : ஜூலை 22, 2026 08:32 PM
காதலித்து ஏமாற்றிய காதலன் கைது
பம்மல்: குரோம்பேட்டை, சானோடோரியத்தை சேர்ந்தவர் ஷியாம், 22. இவர், சங்கர் நகரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து, திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்துள்ளர். இந்த நிலையில் திருமணம் செய்ய மறுத்துள்ளார். மனமுடைந்த அப்பெண், சில நாட்களுக்கு முன் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றார்.
இது குறித்து விசாரித்த பல்லாவரம் மகளிர் போலீசார், ஷியாமை, நேற்று முன்தினம் கைது செய்தனர்.
மாணவியை தாக்கிய வாலிபர் கைது
கீழ்ப்பாக்கம்: பாடியை சேர்ந்த 20 வயது இளம்பெண், ராமாபுரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரியில் பி.இ., படித்து வருகிறார். இவரும், அயனாவரத்தைச் சேர்ந்த விக்னேஷ் குமார் 30 என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், விக்னேஷுக்கு ஏற்கனவே திருமணமானதும், வேறு பெண்களுடன் தொடர்பில் இருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக, கடந்த 18-ம் தேதி கீழ்ப்பாக்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் விக்னேஷை சந்தித்து கேட்டுள்ளார். ஆத்திரமடைந்த விக்னேஷ் அவரை, சரமாரியாக தாக்கியுள்ளார். விசாரித்த டி.பி., சத்திரம் போலீசார், விக்னேஷ் குமாரை கைது செய்தனர்.
சாலையில் தீப்பிடித்து எரிந்த கார்
குன்றத்துார்: கொடுங்கையூரைச் சேர்ந்தவர் சுவாமிநாதன், 42. கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்தவர் கனிஷ்க், 21. நண்பர்களான இருவரும், நேற்று மாலை, ‘ரெனால்ட் டிபர்’ காரில், வண்டலுார் – மீஞ்சூர் சாலையில், குன்றத்துார் அருகே சென்றபோது, காரின் முன் பகுதியில் இருந்து புகை வந்துள்ளது. உடனே, காரை நிறுத்திவிட்டு இருவரும் இறங்கினர். சற்று நேரத்தில் கார் தீப்பிடித்து எரிந்து நாசமானது. பூந்தமல்லி தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.
