ADDED : ஆக 06, 2026 05:51 PM
செயின் பறித்த நபருக்கு தர்ம அடி
பழவந்தாங்கல்: செங்கல்பட்டு செல்வதற்காக, அபிநயா, 21, என்ற பயணி, பழவந்தாங்கல் ரயில் நிலைய டிக்கெட் கவுன்டர் நோக்கி, நேற்று முன்தினம் இரவு சென்றபோது, அவர் அணிந்திருந்த ஒரு சவரன் செயினை பறித்து, மர்ம நபர் தப்பி ஓடினார். அங்கிருந்தோர் அந்நபரை பிடித்து தர்ம அடி கொடுத்த, ரயில்வே போலீசில் ஒப்படைத்தனர்.
செயின் பறிப்பில் ஈடுபட்டவர் திருவாரூரைச் சேர்ந்த மணிகண்டன், 29, என்பதும், சென்னையில் வேலை கிடைக்காததால், சாப்பாட்டிற்கு வழியின்றி செயின் பறித்ததும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், செயினை மீட்டு அபிநயாவிடம் ஒப்படைத்தனர்.
பைக் மீது லாரி மோதியதில் ஒருவர் பலி
குன்றத்துார்: மாங்காடு பகுதியைச் சேர்ந்த, கார்களை பழுது நீக்கி வண்ணம் தீட்டும் செல்வம், 48, ‘ஸ்பிளண்டர்’ பைக்கில், நேற்று காலை சென்று கொண்டிருந்தார். குன்றத்துார் அருகே கொல்லச்சேரி பகுதியை கடந்தபோது, பின்னால் வந்த லாரி மோதி, அதே லாரியின் அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
தனியார் நிறுவன ஊழியர் நீரில் மூழ்கி பலி
படப்பை: படப்பை அருகே ஒரத்துார், நீலமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் சித்தார்த், 45. தனியார் நிறுவன ஊழியரான இவர், நேற்று காலை, வீட்டின் அருகே உள்ள கிணற்றில், படிகட்டு வழியே இறங்கி கால் கழுவினார். அப்போது தவறுதலாக கிணற்றில் விழுந்து மூழ்கினார். நீச்சல் தெரியாததால் சந்தோஷ் சித்தார்த் நீரில் மூழ்கி பலியானார்.
கன்டெய்னர் மோதி ஆட்டோ ஓட்டுநர் பலி
மணலி: கொட்டிவாக்கம், விம்கோ நகரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பாலாஜி, 35, மாதவரம் விரைவு சாலையில், மஞ்சம்பாக்கத்திலிருந்து மணலிக்கு நேற்று, ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார்.
கொசப்பூர் அருகே சாலையோரம் நிறுத்தியிருந்த கன்டெய்னர் லாரி மீது மோதியதில், ஆட்டோவின் முகப்பு அப்பளம் போல் நொறுங்கியது. பலத்த காயமடைந்த பாலாஜி, அங்கேயே உயிரிழந்தார். செங்குன்றம் போக்குவரத்து போலீசார், கன்டெய்னர் லாரி ஓட்டுநர் மதன்ராஜ், 47, என்பவரிடம் விசாரித்து வருகின்றனர்.
‘மெட்ரோ’வில் இரும்பு திருடிய வாலிபர் கைது
செம்மஞ்சேரி: ஓ.எம்.ஆர் காரப்பாக்கத்தில் நடந்து வரும் மெட்ரோ ரயில் பாதை பணிக்காக அடுக்கிவைக்கப்பட்ட இரும்பில், நேற்று முன்தினம் அதிகாலை, 60 கிலோ திருடப்பட்டது. பணித்தள மேலாளர் புகாரில், செம்மஞ்சேரி போலீசார் விசாரித்து, கண்ணகி நகரைச் சேர்ந்த சூர்யா, 21, என்பவரை நேற்று கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
அம்மன் கோவில் உண்டியல்களில் திருட்டு
திருவொற்றியூர்: திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் உள்ள கங்கை அம்மன் கோவில் கதவு, நேற்று முன்தினம் இரவு பூட்டப்பட்டது. நேற்று காலை பார்த்தபோது, கோவிலின் இரு உண்டியல் உடைக்கப்பட்டு காணிக்கை பணம் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது.
தவிர, கோவில் வெளியே பூ வியாபாரம் செய்யும் மல்லிகா என்பவரது கடையிலும் 200 ரூபாய் திருடப்பட்டது தெரிய வந்தது. திருடர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண் கைது
மதுரவாயல்: ஆலப்பாக்கம் எஸ்.பி., பாலசுப்ரமணியம் தெருவில், வீட்டை வாடகைக்கு எடுத்து விபச்சார தொழில் நடத்திய ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த வர்ஷா, 49 என்பவரை, போலீசார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். அங்கு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்ணை மீட்டு, அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
