/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வடகரை - மாதவரம் சந்திப்பில் ஆக்கிரமிப்புகளால் விபத்து அபாயம்
/
வடகரை - மாதவரம் சந்திப்பில் ஆக்கிரமிப்புகளால் விபத்து அபாயம்
வடகரை - மாதவரம் சந்திப்பில் ஆக்கிரமிப்புகளால் விபத்து அபாயம்
வடகரை - மாதவரம் சந்திப்பில் ஆக்கிரமிப்புகளால் விபத்து அபாயம்
ADDED : ஏப் 26, 2024 12:24 AM

செங்குன்றம், செங்குன்றம் புறவழிச்சாலையில், வடகரை- - மாதவரம் நெடுஞ்சாலை சந்திப்பு பிரதானமானதாகும். ஆந்திரா மாநிலம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில் இருந்து, வடசென்னை துறைமுகத்திற்கு செல்லும் அனைத்து கனரக வாகனங்களும், மேற்கண்ட சந்திப்பை கடந்து சென்று வருகின்றன.
மேலும், இங்கிருந்து 1 கி.மீ., துாரத்தில், வடகரை ஊராட்சியில் அரசு ஆதிதிராவிடர் நலத்துறை தொடக்கப் பள்ளி, ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் உள்ளிட்டவை உள்ளன.
இதனால், 2,500க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர், தினசரி அப்பகுதியை கடந்து வருகின்றனர்.
போக்குவரத்து நெரிசல் மிகுந்த அந்த சந்திப்பின் இருபுறமும் 15 அடி நீளத்திற்கு, தனியார் ஆக்கிரமிப்பு கட்டடம் மற்றும் இரும்பு தடுப்பால் அமைக்கப்பட்ட கடைகள் என, ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன.
இதனால், அந்த சந்திப்பை கடப்போர், கனரக வாகனங்களில் சிக்கி உயிரிழக்கும் ஆபத்து உள்ளது.
இது குறித்து, பொதுமக்களும், போக்குவரத்து போலீசாரும் மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
கோடை விடுமுறை முடித்து, பள்ளிகள் திறக்கப்படும் வேளையில், மாணவர்களின் பாதுகாப்பான போக்குவரத்து கேள்விக்குறியாகும்.
எனவே, அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

