/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தண்டையார்பேட்டை குடியிருப்பில் டெங்கு, மலேரியா பரவும் அபாயம்
/
தண்டையார்பேட்டை குடியிருப்பில் டெங்கு, மலேரியா பரவும் அபாயம்
தண்டையார்பேட்டை குடியிருப்பில் டெங்கு, மலேரியா பரவும் அபாயம்
தண்டையார்பேட்டை குடியிருப்பில் டெங்கு, மலேரியா பரவும் அபாயம்
ADDED : செப் 04, 2024 02:02 AM

தண்டையார்பேட்டை:திலகர் நகர் குடியிருப்பில் வசிப்போர் அங்கேயே குப்பை கொட்டுவதால், அப்பகுதியில் டெங்கு, மலேரியா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, குப்பை கொட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்க வேண்டுமென, கோரிக்கை வலுத்துள்ளது.
தண்டையார்பேட்டை, திலகர் நகரில் 100க்கும் மேற்பட்ட நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகள் உள்ளன.
தரைதளத்துடன் நான்கு மாடிகள் கொண்ட குடியிருப்பில், ஆயிரக்கணக்கானோர் வசிக்கின்றனர்.
இங்கு சேகரமாகும் குப்பையை சேகரிக்க, குப்பை வண்டி வருகிறது. ஆனால், இவர்கள் குப்பையை துாய்மை பணியாளர்களிடம் அளிப்பதில்லை.
மாறாக, இந்த குடியிருப்புகளில் வசிக்கும் பெரும்பாலானோர், கட்டத்தின் பின்புறம் உள்ள காலிப் பகுதிகளில், அதிக அளவில் பிளாஸ்டிக், பழைய உணவுப் பொருட்கள், பழைய துணி, வீட்டில் தேவையில்லாத பொருட்கள் உள்ளிட்டவற்றை வீசுகின்றனர்.
இதற்காக, நிறைய வீடுகளில் ஜன்னல் கம்பிகளை பெயர்த்து எடுத்து, குப்பை போட வசதி செய்துள்ளனர். மேல்தளத்திலுள்ள ஒரு சில வீட்டில், கை கழுவும் தண்ணீர் வெளியேற தனி குழாய் அமைத்து, இந்த காலி இடத்தில் விடுகின்றனர்.
இதன் காரணமாக, கீழ் தளத்தில் வசிப்போர் கடும் துர்நாற்றத்தால், சாப்பிடக்கூட முடியாமல் அவதிப்படுகின்றனர் அத்துடன் அந்த பகுதியில் மனிதக்கழிவு கலந்த கழிவு நீரும் வெளியேறுகிறது.
இதனால், அதில் மழைநீர் தேங்கி, 'டெங்கு' கொசு பரப்பும் 'ஏடிஸ்' கொசு உற்பத்தி அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரால், மலேரியா மற்றும் மர்ம காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது.
எனவே, கட்டடத்தின் பின்புறம் குப்பை மற்றும் கழிவுநீரை வெளியேற்றுவோருக்கு கடும் அபராதம் விதித்து, அவர்கள் குப்பை வீசாதவாறு வலை அமைக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:
இந்த நகர்ப்புற மேம்பாட்டு வாரிய குடியிருப்பின் பின்புறம் குவியும் அதிக அளவிலான குப்பையால், எலி, நாய், கொசுக்கள் தொல்லை அதிகரித்துள்ளது. மர்ம காய்ச்சலால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
தினமும் குப்பையை அகற்ற, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டடத்தின் பின்புறம் குப்பை கொட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.