/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மருந்தீஸ்வரர் கோவில் தேரோட்டம் கோலாகலம்
/
மருந்தீஸ்வரர் கோவில் தேரோட்டம் கோலாகலம்
ADDED : மார் 23, 2024 12:32 AM

சென்னை, திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் தேரோட்டம் நேற்று விமரிசையாக நடந்தது.
சென்னை, திருவான்மியூரில் அமைந்துள்ள மருந்தீஸ்வரர் கோவிலில் சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், அருணகிரிநாதரால் பாடல் பெற்றது.
இக்கோவிலின் பங்குனிப் பெருவிழா, மார்ச் 16ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் மூன்றாம் நாள், சந்திரசேகரர் அதிகார நந்தி வாகனத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏழாம் நாளான நேற்று, தேர் திருவிழா நடந்தது.
நேற்று காலை சர்வ அலங்காரத்தில் அம்பாளுடன் சந்திரசேகரர் தேரில் எழுந்தருளினார். காலை 6:30 மணிக்கு சிவ நாமத்துடன் தேர் வடம்பிடிக்கப்பட்டது. நான்கு மாடவீதிகளையும் தேரில் வலம் வந்த சந்திரசேகரர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். காலை,10:45 மணிக்கு தேர் நிலைக்கு வந்தது.

