/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பருத்திப்பட்டு ஏரியில் செத்து மிதந்த மீன்கள்
/
பருத்திப்பட்டு ஏரியில் செத்து மிதந்த மீன்கள்
ADDED : மார் 05, 2025 01:47 AM

ஆவடி:ஆவடி, பருத்திப்பட்டு ஏரி, கடந்த 2019ல் சீரமைக்கப்பட்டு பசுமை பூங்காவாக மாற்றப்பட்டது. இங்கு, 3 கி.மீ., சுற்றளவு நடைபாதை, சிறுவர் பூங்கா, படகு குழாம், உடற்பயிற்சி கூடம், திறந்தவெளி கலையரங்கம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டு உள்ளன.
பருத்திப்பட்டு ஏரியின் வடக்கு பகுதியில், கழிவுநீரகற்று நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதில், ஆவடி சுற்றுவட்டார பகுதியில் இருந்து பாதாள சாக்கடை இணைப்பு வாயிலாக சேகரிக்கப்படும் கழிவு நீர், சுத்திகரிக்கப்பட்டு ஏரியில் விடப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் பருத்திப்பட்டு ஏரியில் மீன்கள் செத்து மிதந்து, கடும் துர்நாற்றம் வீசியது. இதுகுறித்த புகாரை அடுத்து, மீன் பிடி ஊழியர்கள் உதவியுடன் செத்து மிதந்த 500 கிலோ ஜிலேபி மீன்கள் நேற்று அப்புறப்படுத்தப்பட்டன. தொற்று நோய் பரவாமல் இருக்க, ஏரியை சுற்றி பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டது. மின்வெட்டு ஏற்பட்டு, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் இயங்காத நேரத்தில், ஏரியில் கழிவுநீர் பாய்ந்து மீன்கள் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. மீண்டும் இது போன்ற சம்பவம் நடக்காமல் இருக்க, மீன்வளத்துறை அதிகாரிகள் வாயிலாக ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.