/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
டெங்கு பலி? சுகாதாரத்துறை மறுப்பு
/
டெங்கு பலி? சுகாதாரத்துறை மறுப்பு
ADDED : செப் 13, 2024 12:39 AM
செங்கல்பட்டு, செங்கல்பட்டு மாவட்டத்தில், ஒருவர் டெங்கு காய்ச்சலில் இறந்ததாக, தனியார் 'டிவி'க்களில் செய்தி வெளியானதாகக் கூறப்படுகிறது. இத்தகவலை, மாவட்ட மருத்துவத் துறையினர் மறுத்துள்ளனர்.
இதுகுறித்து, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை முதல்வர் ஜோதிகுமார் கூறியதாவது:
செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன், எட்டு பேர் காய்ச்சல் பாதிப்பு காரணமாக அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களில் மூன்று பேருக்கு, டெங்கு காய்ச்சல் ஏற்பட்டிருப்பது, நேற்று முன்தினம் உறுதியானது. அனைவரும், சிகிச்சையில் உள்ளனர். ஆனால், டெங்கு காய்ச்சலால் ஒருவர் இறந்ததாக, தவறான தகவல் பரவுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குனர் பரணிதரன் கூறியதாவது:
மாவட்டத்தில் காய்ச்சல், டெங்கு காய்ச்சல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டெங்கு காய்ச்சலால் ஒருவர் இறந்ததாக, 'டிவி'க்களில் பரவியது தவறான தகவல்.
இவ்வாறு அவர் கூறினார்.