/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கடவுளுக்கு அடுத்ததாக பூசாரியை பக்தர்கள் நம்புகின்றனர்: நீதிமன்றம்
/
கடவுளுக்கு அடுத்ததாக பூசாரியை பக்தர்கள் நம்புகின்றனர்: நீதிமன்றம்
கடவுளுக்கு அடுத்ததாக பூசாரியை பக்தர்கள் நம்புகின்றனர்: நீதிமன்றம்
கடவுளுக்கு அடுத்ததாக பூசாரியை பக்தர்கள் நம்புகின்றனர்: நீதிமன்றம்
ADDED : ஜூன் 13, 2024 12:22 AM
சென்னை, சென்னை, பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் கோவிலின் பூசாரி கார்த்திக் முனுசாமி மீது, சாலிகிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், பாலியல் வன்கொடுமை புகார் அளித்தார்.
விருகம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து, மே 28ல் கார்த்திக் முனுசாமியை கைது செய்தனர்.
இந்த நிலையில், ஜாமின் கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், கார்த்திக் முனுசாமி மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை, நீதிபதி அல்லி விசாரித்தார். போலீசார் தரப்பில் மாநகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் தேவராஜன் ஆஜராகி வாதாடியதாவது:
முக்கிய பிரமுகர் ஒருவருடன் உறவு வைத்து கொள்ளும்படி, புகார் அளித்த பெண்ணை மனுதாரர் வற்புறுத்தியுள்ளார். அதற்கு, புகார்தாரர் மறுத்ததால், பெரியளவில் பணம் கிடைப்பது தடைபட்டது என கூறி, புகார்தாரரை மனுதாரர் திட்டி உள்ளார்.
புகார்தாரரை வற்புறுத்தி, தனியார் மருத்துவமனையில் 2023ல் அவரது கருவை கலைத்துள்ளார்.
மனுதாரரின் மொபைலை புகார்தாரர் பார்த்தபோது, 25க்கும் மேற்பட்ட பெண்களோடு அவர் உறவு வைத்திருந்தது தெரியவந்துள்ளது. அந்த பெண்களின் நிர்வாண படங்கள் மொபைலில் இருப்பதும், அந்த படங்களை மனுதாரர் பல முக்கிய பிரமுகர்களுக்கு அனுப்பியதும் தெரியவந்துள்ளது.
விசாரணை துவக்க நிலையில் இருக்கிறது. ஜாமினில் வெளியே விட்டால், வெளிநாடு சென்று தலைமறைவாக வாய்ப்புள்ளது. எனவே, ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் வாதாடினார்.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
புகார்தாரரான பெண்ணுடன் பலமுறை உடலுறவு வைத்துள்ளார். மேலும் அந்த பெண்ணின் கருவை வலுக்கட்டாயமாக கலைத்துள்ளார். மனுதாரர் அப்பாவி அல்ல. அவர் மீது கடும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு உள்ளது.
கடவுளை வழிபடவும், சில பரிகாரங்கள் செய்து தங்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காணவும், பொதுமக்கள் கோவிலுக்கு வருகின்றனர்.
கடவுளுக்கு அடுத்தபடியாக, கோவில் குருக்கள் அல்லது பூசாரியை தான், பக்தர்கள் முழுமையாக நம்புகின்றனர். மேலும், பிரச்னைகளை தீர்க்க அவர்கள் கூறும் ஆலோசனைகள், வார்த்தைகளை நம்புகின்றனர்.
மனுதாரர் காளிகாம்பாள் கோவிலின் குருக்கள் என்பதால், அவர் மீது நம்பிக்கையும், மரியாதையும் வைத்து, அவரின் வார்த்தைகளை நம்பி, அவருடன் தன் பிரச்னைகளை புகார்தாரர் பகிர்ந்துள்ளார்.
மேலும், மனுதாரர் மேற்கொண்டு வந்த புனிதமான பணிக்கும், கோவிலின் புனிதத்திற்கும் களங்கம் ஏற்பட்டுள்ளது. இவரின் நடவடிக்கையால் 25 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதால், அவரின் செயலை சாதாரணமாக எடுத்து கொள்ள முடியாது.
கார்த்திக் முனுசாமியின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.