/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
துர்க்கையம்மன் கோவில் கோபுரத்தை பாதுகாக்க பக்தர்கள் வலியுறுத்தல்
/
துர்க்கையம்மன் கோவில் கோபுரத்தை பாதுகாக்க பக்தர்கள் வலியுறுத்தல்
துர்க்கையம்மன் கோவில் கோபுரத்தை பாதுகாக்க பக்தர்கள் வலியுறுத்தல்
துர்க்கையம்மன் கோவில் கோபுரத்தை பாதுகாக்க பக்தர்கள் வலியுறுத்தல்
ADDED : ஜூலை 07, 2024 12:34 AM

சென்னை, ;சென்னையில் மாதவரம் - சிறுசேரி மெட்ரோ ரயில் வழித்தடத்தில், ஆயிரம்விளக்கு பகுதியில் இரண்டாவது மெட்ரோ ரயில் நிலையம் சுரங்கப்பாதையில் அமைய உள்ளது. இங்குள்ள ஒயிட்ஸ் சாலையில், 250 ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்த துர்க்கையம்மன் கோவில் உள்ளது.
தற்போது, அப்பகுதிகளில் நடந்து வரும் மெட்ரோ ரயில் பணிக்காக, இந்த கோவிலின் ராஜகோபுரத்தையும், அருகே உள்ள ரத்தின விநாயகர் கோவிலையும் இடிக்க மெட்ரோ நிர்வாகம் முடிவெடுத்தது. இதற்கு, பக்தர்கள் மற்றும் ஹிந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், 'ஆலயம் காப்போம்' கூட்டமைப்பு தலைவர் பி.ஆர்.ரமணன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து, இருதரப்பு வாதங்களையும் விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், 'கோவில் கோபுரத்தை ஏன் இடிக்க வேண்டும்? மெட்ரோ ரயில் நிலைய வாயில் அருகில் உள்ள இடங்களில் மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து, தொழிநுட்ப குழு ஆய்வு செய்ய வேண்டும்' என உத்தரவிட்டனர்.
இதையடுத்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள், துர்க்கையம்மன் கோவில் மற்றும் ராஜகோபுரம் பகுதிகளில் அளவீடு செய்தனர்.
'மிகவும் பழமையான இந்த கோவிலின் ராஜகோபுரத்துக்கு எந்தவித பாதிப்பு இல்லாமல், இங்கு மெட்ரோ ரயில் நிலைய பணிகள் மேற்கொள்ளுமாறு' பக்தர்கள், ஆலயம் காப்போம் நிர்வாகிகள் தரப்பில் அதிகாரிகளிடம் வலியுறுத்தினர்.
அதற்கு, 'கோவில் ராஜகோபுரத்தை 10 மீட்டர் துாரத்திற்கு இடம் மாற்றம் செய்து, மெட்ரோ ரயில் பணிகள் முடிந்த பின், மீண்டும் அதே இடத்தில் பாதுகாப்பாக நிறுவப்படும்' என, மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்தனர். அப்போது பக்தர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர்.
உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி, தொழிநுட்ப குழு ஆய்வு அறிக்கை வரும் 9ம் தேதி சமர்ப்பிக்கப்படும். அதில், இங்கு அமைய உள்ள மெட்ரோ ரயில் நுழைவாயில் இடம் மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகளும், வரைபடங்களும் தயாரித்து, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.