/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
எஸ்.ஐ.,யிடம் தகராறு வடசென்னை மாவட்ட பா.ஜ., நிர்வாகி கைது
/
எஸ்.ஐ.,யிடம் தகராறு வடசென்னை மாவட்ட பா.ஜ., நிர்வாகி கைது
எஸ்.ஐ.,யிடம் தகராறு வடசென்னை மாவட்ட பா.ஜ., நிர்வாகி கைது
எஸ்.ஐ.,யிடம் தகராறு வடசென்னை மாவட்ட பா.ஜ., நிர்வாகி கைது
ADDED : ஆக 05, 2024 01:10 AM

சென்னை:போலீஸ் எஸ்.ஐ., யிடம் தகராறு செய்து, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்த வழக்கில், வடசென்னை மாவட்ட பா.ஜ., நிர்வாகி கபிலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை பெரவள்ளூர் அகரம் சிக்னல் பகுதியில், இம்மாதம் 1ம் தேதி, பா.ஜ., சார்பில் மத்திய அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் மற்றும் லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுக்கு ஓட்டளித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடந்தது.
வடசென்னை மேற்கு மாவட்ட பா.ஜ., சார்பில்ஏற்பாடு செய்திருந்த இக்கூட்டத்தில், அக்கட்சியின் தேசிய செயலர் ஹெச்.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில், வடசென்னை மேற்கு மாவட்ட பா.ஜ., தலைவர் கபிலனும் பேசினார்.
கூட்டம் முடியும் நிலையில், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் எஸ்.ஐ., ஜெகதீசனிடம், கபிலன் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இது குறித்து, பெரவள்ளூர் காவல் நிலையத்தில் ஜெகதீசன் புகார் அளித்தார். அதனால், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிந்து, சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த கபிலனை, 45, நேற்று கைது செய்தனர்.
அடக்குமுறை
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அறிக்கை:
வடசென்னை மேற்கு மாவட்ட பா.ஜ., தலைவர் கபிலனை, பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியதற்காக, போலீசார் கைது செய்திருப்பதாக தெரிகிறது.
தி.மு.க., அரசின் பாசிச போக்கை வன்மையாக கண்டிக்கிறேன். தமிழகம் முழுதும் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து, தினமும் கொலைகளும், கொள்ளைகளும் அரங்கேறுகின்றன.
இந்த வேளையில், தி.மு.க., அரசு தன் அரசியலுக்கு காவல் துறையை பயன்படுத்தி வருகிறது.
பொதுமக்கள் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு வழங்க இயலாத முதல்வர் ஸ்டாலின், பா.ஜ.,வினரை முடக்குவதில் மட்டுமே குறியாக இருக்கிறார்.
இது போன்ற அடக்கு முறைகளால், தி.மு.க., அரசின் ஒட்டு மொத்த நிர்வாக தோல்வியையோ, ஸ்டாலினின் கையாலாகாத தனத்தையோ மறைக்க முடியாது. பா.ஜ.,வினர் மீதான அடக்குமுறையை கைவிட்டு, சட்டம் - ஒழுங்கை முதல்வர் கவனிக்க வேண்டும்.
இவ்வாறு கூறியுள்ளார்.