/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மணலியை பிரிப்பதற்கு கடும் எதிர்ப்பு தி.மு.க., - அ.தி.மு.க., காரசார விவாதம்
/
மணலியை பிரிப்பதற்கு கடும் எதிர்ப்பு தி.மு.க., - அ.தி.மு.க., காரசார விவாதம்
மணலியை பிரிப்பதற்கு கடும் எதிர்ப்பு தி.மு.க., - அ.தி.மு.க., காரசார விவாதம்
மணலியை பிரிப்பதற்கு கடும் எதிர்ப்பு தி.மு.க., - அ.தி.மு.க., காரசார விவாதம்
ADDED : மார் 12, 2025 11:56 PM

மணலி,மணலி மண்டலக்குழு கூட்டம், அதன் தலைவர் தி.மு.க.,வைச் சேர்ந்த ஆறுமுகம் தலைமையில், நேற்று நடந்தது. இதில், செயற்பொறியாளர் தேவேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
விரிவாக்கம்?
இதில், மணலி மண்டலம் இரண்டாக பிரிப்பதைக் கண்டித்து, அ.தி.மு.க., கவுன்சிலர்களான, ஜெய்சங்கர், ஸ்ரீதரன், ராஜேஷ் சேகர் ஆகிய மூவரும், 'மணலி மண்டலத்தை பிரிக்காதே, பேரிடர் காலங்களில் மணலியை தனித்தீவாக்கதே' என்ற வாசகங்கள் அடங்கிய பதாகையுடன், மண்டல அலுவலகம் முன், அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
பின், பதாகைகளுடன்கூட்ட அரங்கிற்குள் சென்று, செயற்பொறியாளர் தேவேந்திரனிடம் தங்கள் கோரிக்கையை தெரிவித்தனர். கூட்டத்தில்,66 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின், வார்டின் அடிப்படை பிரச்னைகள் பற்றி கவுன்சிலர்கள் பேசினர்.
அ.தி.மு.க., 17வது வார்டு, ஜெய்சங்கர்: மணலி மண்டலத்தை பிரிக்கக் கூடாது. தனி நிர்வாகத்தின் கீழ் மண்டலம் செயல்பட வேண்டும்.
மண்டலக் குழு தலைவர்: தனித் தீர்மானம் கொண்டு வர வேண்டும். தி.மு.க., கவுன்சிலர்களின் நிலைப்பாடு குறித்து அறிய விரும்புகிறேன்.
நடவடிக்கை
தி.மு.க., 19வது வார்டு, காசிநாதன்: மணலி மண்டலம் பிரிக்கக் ககூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். இதுகுறித்து, எம்.எல்.ஏ., உள்ளாட்சி துறை அமைச்சர், மேயர் மற்றும் அதிகாரிகளை மூன்று முறை நேரில் பார்த்து வலியுறுத்தி உள்ளோம். தொடர்ந்து, நடவடிக்கை இருக்கும்.
அ.தி.மு.க., கவுன்சிலர் ஸ்ரீதரன், ராஜேஷ்சேகர்: மணலியை, திருவொற்றியூர் - மாதவரம் மண்டலத்துடன் சேர்ப்பது ஏற்புடையதல்ல. பேரிடர் காலங்களில், மணலி தனித்தீவாக மாறி விடும்.
அப்போது, திருவொற்றியூர் மண்டல நிர்வாகம், உள்ளே வர முடியாத சூழல் ஏற்படும். மணலி மண்டலமாக செயல்பட்டால், தனி ஐ.ஏ.எஸ்., அதிகாரி இருப்பார்.
கடந்த முறை, வெள்ள பாதிப்பால், போக முடியாத மணலிபுதுநகருக்கு, ஹெலிகாப்டர் வாயிலாக உணவு வழங்கினோம். இது தனி நிர்வாகம் என்பதாலே சாத்தியமானது.
வார்டுகளின் எண்ணிக்கை குறைவு என்றால், திருவொற்றியூர் - மாதவரம் மண்டலங்களில் இருந்து, தலா இரு வார்டுகளுடன் விரிவாக்கம் செய்து, தனி நிர்வாகத்தின் கீழ், மணலி மண்டலம் இயங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மக்கள் அலைக்கழிப்பு
மணலியில் மத்திய அரசின் பல தொழிற்சாலைகள் உள்ளதால், டில்லி வரை தெரியும். மீறி மாற்றப்பட்டால், மக்கள் அலைக்கழிப்பிற்கு ஆளாக நேரிடும்.
இவ்வாறு அவர்கள் பேசினர்.
மண்டலம் பிரிப்பு சம்பந்தமாக தி.மு.க., - அ.தி.மு.க., கவுன்சிலர்கள் இடையே, காரசாரமாக விவாதம் நடந்தது.
முடிவில் பேசிய மண்டலக் குழு தலைவர் ஆறுமுகம், ''மக்களுக்கு விரோதம் இல்லாத நடவடிக்கையை அரசு எடுக்கும். இந்த விவகாரத்தில் மக்கள் விரும்பும் வகையில், செயல்பாடு இருக்கும்,'' என்றார்.