/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பணி செய்யாத ஒப்பந்த நிறுவனங்களை கறுப்பு பட்டியலில் சேர்க்க போர்க்கொடி அடையாறு கூட்டத்தில் தி.மு.க., கவுன்சிலர்கள் பேச்சு
/
பணி செய்யாத ஒப்பந்த நிறுவனங்களை கறுப்பு பட்டியலில் சேர்க்க போர்க்கொடி அடையாறு கூட்டத்தில் தி.மு.க., கவுன்சிலர்கள் பேச்சு
பணி செய்யாத ஒப்பந்த நிறுவனங்களை கறுப்பு பட்டியலில் சேர்க்க போர்க்கொடி அடையாறு கூட்டத்தில் தி.மு.க., கவுன்சிலர்கள் பேச்சு
பணி செய்யாத ஒப்பந்த நிறுவனங்களை கறுப்பு பட்டியலில் சேர்க்க போர்க்கொடி அடையாறு கூட்டத்தில் தி.மு.க., கவுன்சிலர்கள் பேச்சு
ADDED : ஜூலை 19, 2024 12:27 AM

அடையாறு, அடையாறு மண்டல குழு கூட்டம், தெற்கு வட்டார துணை கமிஷனர் அமித் முன்னிலையில், மண்டல குழு தலைவர் துரைராஜ் தலைமையில் நேற்று நடந்தது. மொத்தமுள்ள 11 வார்டுகளில் ஒன்பது தி.மு.க., - காங்., மற்றும் அ.திமு.க.,வில் தலா ஒரு கவுன்சிலர் பங்கேற்றனர்.
மண்டல சுகாதார அதிகாரி கோமதி, கேன்சர் பாதித்து சில தினங்களுக்கு முன் மரணம் அடைந்தார். அவருக்கு, கூட்டத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
தொடர்ந்து, கவுன்சிலர்கள் பேசியதாவது:
கிண்டி ஈக்காட்டுதாங்கல், 'சிட்கோ' வளாகத்தில் வடிகால் சாலை முறையாக இல்லாததால், வெள்ள பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
அடையாறில் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் தடையின்மை சான்று வழங்காததால், பூங்கா பணி கிடப்பில் உள்ளது. திருவான்மியூரில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்பை மீட்க வேண்டும். திருவான்மியூரில் 'அம்மா' குடிநீர் திட்டத்தை துவங்க வேண்டும். பெசன்ட் நகரில் சாலையோர ஆக்கிரமிப்பால் அடிக்கடி விபத்து நடக்கிறது.
வேளச்சேரியில் முகவரி மாற்றம் என குறிப்பிட்டு, உரிமம் பெற்று ஒரே வீடுகளில் ஐந்துக்கு மேற்பட்ட நாய்கள் வளர்ப்பதால், அக்கம் பக்கத்தில் வசிப்போருக்கு சிரமம் ஏற்படுகிறது.
வேளச்சேரி வீராங்கல் கால்வாயை துார் வாராததால் வெள்ள பாதிப்பு அதிகரிக்கும் நிலை உள்ளது. தரமணியில் சாலையோர ஆக்கிரமிப்பை அகற்ற இரு ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும், நெடுஞ்சாலைத் துறை கண்டு கொள்ளவே இல்லை.
தேர்தலுக்கு முன், ஒப்பந்தம் விடப்பட்ட சாலைகள் இன்னும் சீரமைக்கவில்லை. குறிப்பிட்ட அவகாசத்தில் பணி முடிக்காத ஒப்பந்த நிறுவனங்களை, கறுப்பு பட்டியலில் சேர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் பேசினர்.
இதற்கு பதிலளித்து, தெற்கு வட்டார துணை கமிஷன் அமித் பேசியதாவது:
பருவமழைக்கு முன் நிலுவையில் உள்ள சாலை, வடிகால் பணிகளை முடிக்க வேண்டும். சாலை துண்டிப்புக்கு முன் மின்சாரம் மற்றும் குடிநீர் வாரியம், மாநகராட்சி வார்டு பொறியாளர்களிடம் அனுமதி பெற வேண்டும்.
பணி முடித்த பின் பள்ளம் தோண்டிய பகுதியை முறையாக சீரமைப்பது அவசியம். நிதி உள்ளது; ஆனால் பல வார்டுகளில் இடம் கிடைக்காததால் திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை.
இனிமேல், ஒரு திட்டத்திற்கென கட்டடம் கட்டாமல், 2, 3 தளம் என கட்டி நுாலகம், உடற்பயிற்சி கூடம், அலுவலகம் போன்ற கட்டமைப்பாக அமைக்க வேண்டும். அதற்கு ஏற்ப பொறியாளர்கள் திட்டமிட வேண்டும். அடுத்தக்கூட்டத்தில், வருவாய் துறை அதிகாரிகள் கண்டிப்பாக வரவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து பல்வேறு திட்டங்களுக்கான 42 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.