ADDED : செப் 15, 2024 12:34 AM
'மாஜி' பெண் போலீஸ் ைகது
நுங்கம்பாக்கம், வைகுண்டபுரம், 22வது தெருவைச் சேர்ந்தவர் திலீப் குமார், 42. ஜிம் பயிற்சியாளர். அவரை மதுரையைச் சேர்ந்த சுந்தரவல்லி, 39 என்பவர் காதலித்துள்ளார். பின், இருவருக்கும் காதல் முறிவு ஏற்பட்டுள்ளது.
போலீசாக வேலை பார்த்த சுந்தரவல்லி, 2016ம் ஆண்டு முதல் வேலைக்கு செல்லவில்லை. கடந்த 11ம் தேதி இரவு, சுந்தரவல்லி மதுபோதையில், நுங்கம்பாக்கத்தில் உள்ள திலீப் குமார் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவர் இல்லாததால், அவரது தாய் அமலுவை தாக்கி ரகளை செய்துள்ளார்.
இதுகுறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு, அமலு புகார் அளித்தார். அங்கு வந்த நுங்கம்பாக்கம் போலீசார் தேவேந்திரன், சிவா ஆகியோர் விசாரணை மேற்கொண்டபோது. போலீசாரையும் சுந்தரவல்லி தாக்கியுள்ளார்.
புகாரின் அடிப்படையில் நேற்று சுந்தரவல்லியை போலீசார் கைது செய்தனர்.
பஸ் கண்ணாடி உடைப்பு
வில்லிவாக்கத்தை சேர்ந்த கிருஷ்ணகுமார், 47. தடம் எண் 48 சி பேருந்து நடத்துனராக வேலை பார்க்கிறார். கடந்த 13ம் தேதி மாலை 7:00 மணியளவில், அயனாவரம் ரயில்வே காலனியில், தண்டையார்பேட்டையை சேர்ந்த சிலம்பரசன், 47, என்ற போதை ஆசாமி பேருந்தில் ஏறினார். போதை ஆசாமி பேருந்துக்குள் எச்சில் துப்பி, அநாகரிகமாக பேசியபடி வந்துள்ளார்.
பேசின்பாலம் ரயில் நிலையம் அருகே பேருந்து வந்த போது, திடீரென இறங்கிய போதை ஆசாமி, கீழே கிடந்த கல்லை எடுத்து பேருந்தின் பின் பக்க கண்ணாடியை உடைத்தார். அங்கிருந்து, பேசின்பாலம் ரயில் நிலையத்தை நோக்கி ஓடிய போதை ஆசாமியை, அப்பகுதியினர் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
பெண்ணிடம் வம்பு
பெரம்பூர், நெட்டால் கார்டன் பகுதியை சேர்ந்தவர் ரேவதி, 28. கடந்த 13ம் தேதி இரவு, பெரம்பூர் மேல்பட்டி பொன்னப்பன் தெருவில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அடையாளம் தெரியாத ஒருவர், மது போதையில் ரேவதியின் கையை பிடித்து இழுத்து தொந்தரவு செய்ததுடன், வீடுவரை பின்தொடர்ந்து தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து அப்பகுதிவாசிகள் உதவியுடன் போதை ஆசாமியை பிடித்து போலீசாரிடம் ரேவதி ஒப்படைத்தார்.
பிடிபட்ட நபர், செம்பியம், மதுரை சாமி மடம் பகுதியை சேர்ந்த அப்துல்லா,38 என்பதும், ஆட்டோ ஓட்டுனர் என்பதும் தெரியவந்தது.
அப்துல்லாவின் மனைவியை வரவழைத்து அவரிடம் போதை ஆசாமியை ஒப்படைத்து, மறுநாள் விசாரணைக்கு வரும்படி கூறினர். இதன்படி, நேற்று காலை காவல்நிலையம் சென்ற அப்துல்லாவை, போலீசார் கைது செய்தனர்.
மதுபாட்டில்கள் பதுக்கல்
மேற்கு முகப்பேர் சீவகசிந்தாமணி சாலையில் நொளம்பூர் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த சேகர், 42 என்பவர் சட்டவிரோதமாக 27 மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விற்பனைக்கு விற்று வந்ததை பார்த்து, கையும் களவுமாக பிடித்தனர்.