/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
துபாய் கிளப் உரிமையாளர் பாலியல் வழக்கில் கைது
/
துபாய் கிளப் உரிமையாளர் பாலியல் வழக்கில் கைது
ADDED : ஆக 03, 2024 12:25 AM

சென்னை, தமிழகத்தில் வேலை தேடும் பெண்கள் மற்றும் நடிகையாக விரும்பும் பெண்களை குறிவைத்து, போலி விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகின்றன.
விளம்பரத்தில் குறிப்பிட்டுள்ள எண்ணை தொடர்பு கொள்ளும் பெண்களிடம், வெளிநாட்டில் ஹோட்டல்களில் நடனமாடும் வேலை உள்ளது என்றும் தங்கும் வசதி, உணவு முற்றிலும் இலவசம் என்றும் ஆசைவார்த்தை கூறுகின்றனர்.
இதை உண்மை என நம்பி வாழ்வாதாரத்திற்காக, ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாய் நகருக்கு சென்ற பல பெண்கள், விபசார தொழிலில் கட்டாயப்படுத்தப்பட்டு ஈடுபடுத்தப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில், சமீபத்தில், பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் விபசார தடுப்பு பிரிவில் இது தொடர்பாக புகார் அளித்தார்.
அதன்படி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்த துபாய்க்கு ஏமாற்றி அனுப்பி வைத்த, மடிப்பாக்கத்தைச் சேர்ந்த பிரகாஷ் ராஜ், 24, தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயகுமார், 40, துரைப்பாக்கத்தைச் சேர்ந்த ஆபியா, 24, ஆகிய மூவரையும், மே 30ம் தேதி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும், துபாயில் உள்ள 'தில்ரூபா' கிளப் உரிமையாளரான முஸ்தபா புத்தங்கோடு, 56, என்பவரை தேடி வந்தனர்.
நேற்று அவர், கேரளா மாநிலம் மலப்புரம் பகுதியில் பதுங்கியிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, அங்கு சென்ற தனிப்படை போலீசார் முஸ்தபாவை நேற்று கைது செய்து, குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.