/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விபத்தில் இறந்தோரின் குடும்பத்தினர் போராட்டம்
/
விபத்தில் இறந்தோரின் குடும்பத்தினர் போராட்டம்
ADDED : மார் 09, 2025 01:04 AM

திருத்தணி,
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே கே.ஜி.கண்டிகையில் நேற்று முன்தினம், டாரஸ் லாரி மோதியதில், தடம் எண்: 'டி48' அரசு பேருந்து விபத்துக்குள்ளானது.
இதில் பயணம் செய்த, அம்மையார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த நான்கு பேர், சம்பவ இடத்திலேயே இறந்தனர். படுகாயமடைந்த 30 பேர், திருத்தணி, திருவள்ளூர் மற்றும் சென்னை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர்.
இந்நிலையில், உயிரிழந்த நான்கு பேரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் என, 300க்கும் மேற்பட்டோர், திருத்தணி அரசு மருத்துவமனையில் குவிந்தனர்.
அங்கு, முதல்வர் ஸ்டாலின் அறிவித்த, மூன்று லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை நான்கு பேரின் குடும்பத்தினரிடம், சிறுபான்மை துறை அமைச்சர் நாசர், கலெக்டர் பிரதாப், திருத்தணி தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரன் ஆகியோர் வழங்கினர்.
அப்போது, உயிரிழந்தோரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க கோரி, நேற்று இரவு வரை, இறந்தவர்களின் உடல்களை வாங்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு 8:30 மணிக்கு உடல்கள் ஒப்படைக்கப்பட்டன. இதையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 200 பேரை கைது செய்தபோலீசார், பின் விடுவித்தனர்.
விபத்து ஏற்படுத்திய டாரஸ் லாரி ஓட்டுநர், ஊத்துக்கோட்டை அடுத்த வெம்பேடைச் சேர்ந்த பாஸ்கர், 55, என்பவரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.