கடப்பேரி பழைய பொருட்கள் சேமிப்பு கிடங்கில் தீ விபத்து
கடப்பேரி பழைய பொருட்கள் சேமிப்பு கிடங்கில் தீ விபத்து
ADDED : ஜூன் 10, 2026 08:01 PM
குன்றத்துார்: கடப்பேரியில் காயலான் கடைக்கான பழைய பொருட்கள் சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தால், அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது.
தாம்பரம் அடுத்த கடப்பேரியைச் சேர்ந்தவர் ராஜா. இவர், குன்றத்துார் அடுத்த திருமுடிவாக்கத்தில், பழைய பொருட்கள் சேமிப்பு கிடங்கு நடத்தி வருகிறார். வடமாநிலத்தைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், அங்கேயே தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.
நேற்று மதியம், கிடங்கின் ஒரு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. அங்கிருந்த ஊழியர்கள், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், தீ மளமளவென பரவி, கொழுந்துவிட்டு எரிந்ததால் அணைக்க முடியவில்லை. விண்ணை முட்டும் அளவிற்கு கரும்புகை எழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து, பூந்தமல்லி, தாம்பரம் தீயணைப்பு நிலையங்களில் இருந்து வந்த வீரர்கள், தீ அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். போதிய தண்ணீர் இல்லாததால், டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு, தீ அணைக்கும் பணி தொடர்ந்தது. நீண்ட போராட்டத்திற்கு பின் தீ அணைக்கப்பட்டது. இந்த விபத்தில், கிடங்கில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாகின.
கிடங்கின் அருகே வேறு நிறுவனங்கள் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. திருமுடிவாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.
