ADDED : ஜூலை 14, 2026 06:23 PM
மாதவரம், ஜூலை 15–
பிளாஸ்டிக் நிறுவன கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில், பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின.
புரசைவாக்கத்தைச் சேர்ந்தவர் சித்தார்த் ஜெயின். இவருக்கு சொந்தமாக, மாதவரம் தபால்பெட்டி பகுதியில், ‘எம்.லைட்., இண்டஸ்ட்ரீஸ்’ என்ற நிறுவனம் உள்ளது.
இங்குள்ள நான்கு கிடங்குகளில், வீட்டு அலங்கார விளக்குகள், கிச்சன் பொருட்கள், மின் சாதனங்கள், அயல்நாட்டு செராமிக் பொருட்கள் உள்ளிட்டவை இருப்பு வைக்கப்பட்டு இருந்தன.
நேற்று காலை 9:00 மணி அளவில், கிடங்கில் இருந்து திடீரென வெண்புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் தீ வேகமாக பரவி, கிடங்கு முழுதும் கொழுந்துவிட்டு எரிந்தது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மாதவரம், வியாசர்பாடி, மணலி, செம்பியம், வில்லிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள், பல மணி நேரம் போராடி, மதிய வேளையில் தீயை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
விபத்து ஏற்பட்டபோது கிடங்கில் யாரும் இல்லாததால் உயிர்சேதம் ஏற்படவில்லை. இருப்பினும், பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, மாதவரம் போலீசார் வழக்குப்பதிந்து, தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
****
