/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இருளில் மூழ்கிய பெரும்பாக்கம் 10 நாளாக பகுதிவாசிகள் அச்சம் படம் உண்டு
/
இருளில் மூழ்கிய பெரும்பாக்கம் 10 நாளாக பகுதிவாசிகள் அச்சம் படம் உண்டு
இருளில் மூழ்கிய பெரும்பாக்கம் 10 நாளாக பகுதிவாசிகள் அச்சம் படம் உண்டு
இருளில் மூழ்கிய பெரும்பாக்கம் 10 நாளாக பகுதிவாசிகள் அச்சம் படம் உண்டு
ADDED : ஏப் 24, 2024 12:47 AM

சென்னை, பெரும்பாக்கம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில், 21,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள சாலை, வடிகால் வசதிகளை, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் பராமரிக்கிறது.
இங்கு, 80க்கும் மேற்பட்ட தெரு விளக்குகள் உள்ளன. இதை, பெரும்பாக்கம் ஊராட்சி பராமரிக்கிறது. பல தெருக்களில், 10 நாட்களுக்கும் மேலாக தெருவிளக்குகள் எரியவில்லை.
அதேபோல், நெடுஞ்சாலைத் துறை புதிதாக அமைத்த, 80 அடி அகல பிரதான சாலைகளிலும் தெருவிளக்குகள் அமைக்கப்படவில்லை. இதனால் பெண்கள், சிறுமியர் நடமாட அச்சப்படுகின்றனர்.
குறிப்பாக, இரவு 7:00 முதல் 9:00 மணி வரை, வேலைக்கு சென்று வீடு திரும்பும் மக்கள், இதே சாலைகள் வழியாக செல்கின்றனர்.
இருட்டில் வேகமாகச் செல்லும் வாகனங்களால் விபத்தில் சிக்குகின்றனர்.
இது குறித்து, பகுதிமக்கள் கூறியதாவது:
இருட்டை பயன்படுத்தி சிலர் வழிப்பறி, திருட்டு சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். பெண்களை சில்மிஷம் செய்கின்றனர். வாரிய அதிகாரிகளிடம் கூறினால், ஊராட்சி தான் பொறுப்பு என்கின்றனர்.
ஊராட்சி அதிகாரிகளிடம் கூறினால், நிதி பற்றாக்குறை என நழுவிச் செல்கின்றனர். திருட்டு சம்பவம் குறித்து, போலீசாரிடம் புகார் அளித்தால், அவர்கள்,'இருட்டில் எங்கே சென்று திருடர்களை தேடுவது' என்கின்றனர்.
தெருவிளக்கு எரியாததால், பல்வேறு இன்னல்களை அனுபவிக்கிறோம். ரவுடிகளால், பழிவாக்கும் சம்பவங்களும் இருட்டில் நடக்க வாய்ப்புள்ளது.
குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்கள் பயமில்லாமல் செல்லவும் தெருவிளக்குகள் எரியும் வகையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

