/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வெயிலில் தப்பிக்க நீர்நிலைகளுக்கு சென்ற நான்கு பேர் நீரில் மூழ்கி பரிதாப பலி
/
வெயிலில் தப்பிக்க நீர்நிலைகளுக்கு சென்ற நான்கு பேர் நீரில் மூழ்கி பரிதாப பலி
வெயிலில் தப்பிக்க நீர்நிலைகளுக்கு சென்ற நான்கு பேர் நீரில் மூழ்கி பரிதாப பலி
வெயிலில் தப்பிக்க நீர்நிலைகளுக்கு சென்ற நான்கு பேர் நீரில் மூழ்கி பரிதாப பலி
ADDED : மே 03, 2024 12:28 AM

வெயிலின் உஷ்ணம் தாங்காமல், ஏரி, ஆறு, கடல் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு குளிக்க நண்பர்கள், குடும்பத்தினருடன் பலரும் படையெடுக்கின்றனர்.
அவ்வாறு செல்வோர், நீர்நிலைகளின் ஆழம், ஆபத்து குறித்து அறிவதில்லை. இதனால், தண்ணீரில் மூழ்கி இறக்கும் நிலை ஏற்படுகிறது.
சென்னை, மூலக்கடை அன்னை சத்யா நகரைச் சேர்ந்தவர் செந்தில்நாதன், 40. இவர் ஆவடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
நேற்று முன்தினம், விடுமுறை என்பதால், நண்பர்களுடன் பழவேற்காடு வந்தார். அரங்கம்குப்பம் கடற்கரை பகுதியில் மாலை வரை, நண்பர்களுடன் குளித்து விளையாடிக்கொண்டிருந்தார். மாலை, 6:00 மணிக்கு, கடல் அலையில் சிக்கி, தண்ணீர் மூழ்கி மாயமானார்.
அப்பகுதி மீனவர்கள் உதவியுடன், செந்தில்நாதன் மீட்கப்பட்டு, பழவேற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது.
மீஞ்சூர் அடுத்த நந்தியம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கரண்சிங், 22. நேற்று முன்தினம் மாலை, நண்பர்களுடன், மீஞ்சூர் அருகில் வெள்ளம்பாக்கம் கிராமத்தில் உள்ள ஏரியில் குளித்தார்.
அப்போது, திடீரென மூழ்கி மாயமானார். நேற்று காலை, கரண்சிங் இறந்த நிலையில் மீட்கப்பட்டார்.
திருவேற்காடு, மகாலட்சுமி நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் அறிவுடைநம்பி மகன் தயாநிதி, 15. இவர், 10ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார்.
நேற்று காலை, நண்பர் அம்ரித், 15, என்பவருடன், எம்.ஜி.ஆர்., நகரில் உள்ள அயனம்பாக்கம் ஏரியில் குளிக்கச் சென்றார்.
தெர்மாகோல் மீது படுத்து குளித்த போது, திடீரென தெர்மாகோல் உடைந்து, தயாநிதி நீரில் மூழ்கினார். தீயணைப்பு துறையினர் தயாநிதியை சடலமாக மீட்டனர்.
சென்னை, பெரம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக், 27. இவர், மனைவி மற்றும் நண்பர்களுடன், நேற்று முன்தினம் மாலை, கோவளம் புளூ பீச் கடற்கரைக்கு வந்தார்.
அனைவரும் கடலில் குளித்தபோது, கார்த்திக் ராட்சத அலையில் இழுத்துச் செல்லப்பட்டார். அங்கிருந்த மீனவர்கள் கடலுக்குள் அவரை, மயங்கிய நிலையில் மீட்டனர்.
திருப்போரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது, அவர் ஏற்கனவே இறந்தது தெரிந்தது.
வெயில் தாக்கத்தில் இருந்து தப்பிப்பதற்காக நீர்நிலைகளுக்கு செல்வோர், நீரில் மூழ்கி இறப்பதை தடுக்கும் நடவடிக்கையில், தமிழக அரசு ஈடுபட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
-நமது நிருபர்-