மாமல்லையில் கிணறு தோண்டியபோது விபரீதம் மின்சாரம் பாய்ந்து நான்கு தொழிலாளர்கள் பலி
மாமல்லையில் கிணறு தோண்டியபோது விபரீதம் மின்சாரம் பாய்ந்து நான்கு தொழிலாளர்கள் பலி
ADDED : ஜூலை 11, 2026 10:53 PM
மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் கிணறு தோண்டியபோது, மின்சாரம் பாய்ந்து நான்கு தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மாமல்லபுரம், கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் உள்ள தனியார் விடுதியின் குடிநீர் தேவைக்காக, 40 அடி ஆழ கிணறு தோண்டும் பணி நேற்று நடந்தது. கூலித் தொழிலாளர்கள், காலையில் இருந்து கிணறு தோண்டினர். பிற்பகல் 2:30 மணிக்கு கிணற்றை தோண்டி முடித்தனர்.
பின், கிணறு தோண்ட பயன்படுத்திய இரும்புக்குழாயை, படிப்படியாக மேலே இழுத்தனர். ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட குழாயை, தனித்தனியாக கழற்றி மேலே இழுத்திருக்க வேண்டும். ஆனால், தனித்தனியே கழற்றாமல், ஒரே குழாயாக இழுத்து, மேலே கொண்டு வந்தனர்.
அப்போது, எடை தாங்காமல் அருகில் இருந்த உயரழுத்த மின்தடத்தில், இரும்பு குழாய் சரிந்து, அவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது.
இதில், மாமல்லபுரத்தைச் சேர்ந்த அப்துல் காதர் மகன் பாஷா, 45; மாமல்லபுரம் அடுத்த வசந்தபுரியைச் சேர்ந்த பாலாஜி என்ற வெங்கடேசன், 22; கடம்பாடியைச் சேர்ந்த பச்சமுத்து மகன் ராஜேந்திரன், 52; கல்பாக்கம் ஆயப்பாக்கத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் பிரபு, 40, ஆகிய நான்கு பேரும், சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்தனர்.
மாமல்லபுரம் அடுத்த காரணையைச் சேர்ந்த பகவான், 33, சற்றுத் தொலைவில் இருந்ததால், உயிர் தப்பினார்.
மாமல்லபுரம் போலீசார் விரைந்து சென்று, மின் இணைப்பை துண்டித்து, உடல்களை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
செங்கல்பட்டு வருவாய் கோட்டாட்சியர் பாலாஜி, போலீஸ் எஸ்.பி., அய்மன் ஜமால், போலீஸ் டி.எஸ்.பி., அறிவழகன், திருப்போரூர் த.வெ.க., – எம்.எல்.ஏ., விஜயராஜ் ஆகியோர் அங்கு சென்று, விபத்து குறித்து விசாரித்தனர்.
இத்தொழிலாளர்கள், ஆழ்துளை கிணறு தோண்டும் சாதனங்களை வாடகைக்கு எடுத்து, இத்தொழில் செய்து வந்தது விசாரணையில் தெரிய வந்தது.
விடுதி உரிமையாளர், கிணறு தோண்டும் சாதனங்களை வாடகைக்கு விட்டவர் உள்ளிட்டோரிடம், போலீசார் விசாரித்து வருகின்றனர்.
***
