/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நெமிலிச்சேரி 5வது வார்டில் நன்னீர் வினியோகம்
/
நெமிலிச்சேரி 5வது வார்டில் நன்னீர் வினியோகம்
ADDED : மே 13, 2024 01:51 AM

நெமிலிச்சேரி:பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது, நெமிலிச்சேரி ஊராட்சியில் ஒன்பது வார்டுகள் உள்ள இந்த ஊராட்சியில், 12,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.
கடந்த 1996ம் ஆண்டு முதல், அன்னம்பேடு ஊராட்சியில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்றில் இருந்து குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந்தது.
ஒன்பது வார்டுகளுக்கும் போதிய தண்ணீர் வழங்க இயலாத காரணங்களால், 2010ல், நெமிலிச்சேரி ஊராட்சி சார்பில் வண்டலுார் -- மீஞ்சூர் வெளிவட்ட சாலையோரத்தில், ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது.
ஆனால், அந்த ஆழ்துளை கிணற்றில் உள்ள தண்ணீர், உப்பு தண்ணீராக இருந்தது. பொதுமக்கள் அதை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து, நெமிலிச்சேரியில் உள்ள ஒன்பது வார்டுகளுக்கும், மீண்டும் அன்னம்பேடு பகுதியில் இருந்து குடிநீர் வினியோகிக்கப்பட்டது.
இந்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன், அன்னம்பேடு மற்றும் நெமிலிச்சேரியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பின்போது, மழை நீரை வெளியேற்ற நீர்வழித்தடம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இப்பணியின் போது, அன்னம்பேடு ஆழ்துளை கிணற்றில் இருந்து, நெமிலிச்சேரியில் உள்ள ஒன்று முதல் ஐந்து வார்டுகளுக்கு குடிநீர் செல்லும் குழாய்கள் சேதமடைந்தன.
இதனால், கடந்த மூன்று ஆண்டுகளாக நெமிலிச்சேரி 1, 2, 3, 4 மற்றும் 5 வார்டுகளில் உள்ள, 1,400 வீடுகளுக்கு உப்பு தண்ணீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.
இதனால், பகுதிவாசிகள் ஒரு குடம் தண்ணீர் 15 ரூபாயும், 'கேன்' தண்ணீர் 30 ரூபாயும் கொடுத்து வாங்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டனர்.
இது குறித்து, கடந்த மார்ச் 6ம் தேதி, நம் நாளிதழில் படத்துடன் விரிவான செய்தி வெளியானது.
கலெக்டர் அதிரடி
இதன் எதிரொலியாக அன்று இரவு, திருவள்ளூர் கலெக்டர் பிரபு சங்கர் உத்தரவுப்படி, பூந்தமல்லி வட்டார வளர்ச்சி அலுவலர் சம்பவ இடத்தை வந்து பார்வையிட்டார்.
இதைத்தொடர்ந்து, 15வது மானியக்குழு நிதியில் இருந்து 5.62 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், தேவி நகர் முதல் ராஜிவ் நகர் வரை 2 கி.மீ., துாரத்திற்கு உடைந்த குழாய்கள் சீரமைக்கப்பட்டன.
முதற்கட்டமாக, கடந்த வாரம் முதல் பழையபடி, அன்னம்பேடு வாழைத்தோப்பில் இருந்து ஐந்தாவது வார்டுக்கு நன்னீர் வழங்கப்பட்டு வருகிறது.
மீதமுள்ள நான்கு வார்டுகளுக்கு விரைவில், நன்னீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஊராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாத நிலையில், பிரச்னைக்கு தீர்வு காண வழிவகை செய்த 'தினமலர்' நாளிதழ் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.