/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பட்டா கிடைத்தது; ரூ.15 லட்சம் எகிறியது இ.சி.ஆர்., - ஓ.எம்.ஆரில் நிலத்தின் மதிப்பு உயர்வு வீடு, அலுவலக கட்டுமானங்கள் மேலும் அதிகரிப்பு
/
பட்டா கிடைத்தது; ரூ.15 லட்சம் எகிறியது இ.சி.ஆர்., - ஓ.எம்.ஆரில் நிலத்தின் மதிப்பு உயர்வு வீடு, அலுவலக கட்டுமானங்கள் மேலும் அதிகரிப்பு
பட்டா கிடைத்தது; ரூ.15 லட்சம் எகிறியது இ.சி.ஆர்., - ஓ.எம்.ஆரில் நிலத்தின் மதிப்பு உயர்வு வீடு, அலுவலக கட்டுமானங்கள் மேலும் அதிகரிப்பு
பட்டா கிடைத்தது; ரூ.15 லட்சம் எகிறியது இ.சி.ஆர்., - ஓ.எம்.ஆரில் நிலத்தின் மதிப்பு உயர்வு வீடு, அலுவலக கட்டுமானங்கள் மேலும் அதிகரிப்பு
ADDED : ஆக 02, 2024 12:09 AM

சோழிங்கநல்லுார் ;சோழிங்கநல்லுார் தாலுகாவில் நீண்டகால போராட்டத்திற்கு பின் 6,751 பேருக்கு பட்டா வழங்கப்பட்டு உள்ளது. இதனால், இ.சி.ஆர்., - ஓ.எம்.ஆர்., பகுதிகளில் மனை மதிப்பு, 15 லட்சத்தில் இருந்து 30 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது. வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட கட்டுமானங்களும் அதிகரித்து வருகின்றன.
சென்னையின் 16 தாலுகாக்களில், அதிக பரப்பு, அதிக மக்கள் தொகை, இ.சி.ஆர்., --- ஓ.எம்.ஆர்., பகுதிகளை உள்ளடக்கிய தாலுகாவாக சோழிங்கநல்லுார் உள்ளது. இப்பகுதியில் ஐ.டி., நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகரித்து, அபார வளர்ச்சி அடைந்து வருகிறது.
சோழிங்கநல்லுார் தாலுகாவில், நீர்நிலைகளை ஒட்டி, அரசு புறம்போக்கு நிலங்களில் பலர் வசிக்கின்றனர். இப்பகுதியினருக்கு பட்டா இல்லை. பட்டா இருக்கும் நிலங்களால் அப்பகுதி மேம்பட்டு வரும் நிலையில், பட்டா இல்லாத அரசு புறம்போக்கு நிலங்களில் பெரிய அளவில் வளர்ச்சி காணப்படவில்லை.
மேலும், 2008ம் ஆண்டு, 1,000க்கும் மேற்பட்டோருக்கு குடியேறும் அரசு ஆணையுடன் சோழிங்கநல்லுாரில் வீடு வழங்கப்பட்டது. ஆனால் பட்டா வழங்கவில்லை. இதனால், வீடு கட்ட அனுமதி, வரி செலுத்த, வங்கி கடன் பெற முடியாதது போன்ற சிக்கல் நீடித்தது.
குறிப்பாக ஒரே இடத்தில், பட்டா இருக்கும் நிலத்திற்கு அதிக விலையும், பட்டா இல்லாத நிலத்திற்கு குறைந்த விலையும் என, இரு வேறு மதிப்பு நிலவுகிறது.
இதனால், பட்டா கோரி, முதல்வர் பிரிவு, வருவாய் துறை அதிகாரிகள் உட்பட பலரிடம் பல ஆண்டுகளாக மனு கொடுத்தனர். பல கட்ட பரிசீலனைக்கு பின், அரசு புறம்போக்கு நிலத்தில் வசிப்போருக்கு பட்டா வழங்கி வருகிறது.
அந்த வகையில், சோழிங்கநல்லுார் தாலுகாவில் 6,751 பேருக்கு பட்டா வழங்கப்பட்டு உள்ளது.
அரசு புறம்போக்கு நிலங்களுக்கு பட்டா கிடைத்துள்ளதால், நிலத்தின் விலை உயர்ந்து, பயனாளிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அவர்கள் கூறியதாவது:
நீண்ட நாள் கோரிக்கையாக பட்டா கிடைத்துள்ளது. எங்கள் நிலங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைத்துள்ளதால் வீடு கட்ட, கல்வி, திருமணம், மருத்துவம் போன்ற அவசர பணத் தேவைக்கு வங்கிகளில் கடன் பெற முடியும்.
அரசு திட்டங்களுக்கு இடத்தை கையகப்படுத்தும்போது, உரிய இழப்பீடு தொகை கிடைக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் கூறியதாவது:
அரசு வகைப்பாடு நிலங்களுக்கு பட்டா வழங்கியதால், நிலத்தின் மதிப்பு அதிகரிக்கும். பட்டா இல்லாமல், 600 சதுர அடி இடத்திற்கு, 15 - 20 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. தற்போது, பட்டா வழங்கப்பட்டு உள்ளதால் 25 - 30 லட்சம் ரூபாய் வரை விலை அதிகரித்து உள்ளது.
இதனால், இப்பகுதியில் வளர்ச்சி, கட்டமைப்பு மேம்பாடு அதிகரிக்கும்.பத்திரப்பதிவு, கட்டட அனுமதி, வரி செலுத்த வழிவகை ஏற்பட உள்ளதால், அரசுக்கும் வருவாய் அதிகரிக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதே போன்ற வகைப்பாட்டில் வசிக்கும், 3,000க்கும் மேற்பட்டோருக்கும் பட்டா வழங்க வேண்டி உள்ளது. அவர்களும், விரைவில் பட்டா கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.