ஜி.எஸ்.டி., அதிகாரிகளை சிறைபிடித்த வியாபாரிகளால் பிராட்வேயில் பரபரப்பு
ஜி.எஸ்.டி., அதிகாரிகளை சிறைபிடித்த வியாபாரிகளால் பிராட்வேயில் பரபரப்பு
ADDED : ஜூலை 30, 2026 10:53 PM

சென்னை: பிராட்வேயில் சோதனைக்கு வந்த ஜி.எஸ்.டி., அதிகாரிகளை சிறைபிடித்த பாத்திரக்கடை வியாபாரிகளால் பரபரப்பு ஏற்பட்டது.
பிராட்வே அடுத்த தங்க சாலையில் அலுமினியம், ஸ்டீல் உட்பட 300க்கும் மேற்பட்ட மொத்த வியாபார பாத்திர கடைகள் உள்ளன. இங்குள்ள இரு கடைகளில், நேற்று மாலை 7:00 மணிக்கு ஜி.எஸ்.டி., கண்காணிப்பாளர்கள் நிஷாந்த், கும்பேசன், இன்ஸ்பெக்டர்கள் அனீஸ், சுசில் மற்றும் அருண் பிரசாத், ஜெகதீஸ்வரன் ஆகிய ஆறு பேர் சோதனைக்கு சென்றுள்ளனர்.
கடையின் உரிமையாளர், அதிகாரியிடம் ‘நோட்டீஸ்’ அல்லது அடையாள அட்டையை கேட்டபோது, அதிகாரிகள் கொடுக்க மறுத்துள்ளனர். தொடர்ந்து, உரிமையாளரிடம் ‘லஞ்சம்’ கேட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அங்கிருந்த, 300க்கும் மேற்பட்ட வியாபாரிகள் குவிந்து, அதிகாரிகள் வெளியே செல்ல முடியாமல் சிறைபிடித்தனர்.
தகவலறிந்து வந்த யானைகவுனி போலீசார், வியாபாரிகளிடம் சமரசம் செய்தனர்; அவர்கள் சமரசம் ஆகவில்லை. பூக்கடை துணை கமிஷனர் கோபி தலைமையிலான, 100க்கும் மேற்பட்ட போலீசார் வரவழைக்கப்பட்டனர்.
சிறைபிடிக்கப்பட்ட அதிகாரிகளை மீட்ட போலீசார், பத்திரமாக வெளியே அழைத்து வந்தனர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
போலீசாரின் விசாரணையில், அதிகாரிகளிடம் அடையாள அட்டை, சோதனைக்கு தேவையான உரிய ஆவணங்கள் இருந்தது தெரியவந்தது. இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
இது குறித்து வியாபாரிகள் கூறியதாவது:
பிராட்வே, பாத்திர கடைகளில் கடந்த ஒன்றரை மாதங்களாக, ஜி.எஸ்.டி., அதிகாரிகள் சோதனை என்ற பெயரில் இரவு 10:00 மணிக்கு மேல் கடைகளுக்கு தொடர்ந்து வருகின்றனர். பின், நள்ளிரவு வரை, 50 லட்சம் கேட்டு, பேரம் பேசுகின்றனர். நேற்று முன்தினம், அருகில் உள்ள கடை உரிமையாளரிடம், 40 லட்சம் வாங்கியதாக கூறப்படுகிறது.
நேற்று, சோதனைக்கு வந்த அதிகாரிகளிடம், நோட்டீஸ் மற்றும் அடையாள அட்டை கேட்டபோது, அதிகாரிகள் கொடுக்க மறுத்தனர்.
இதனால் வியாபாரிகள் குவிந்ததால், அதிகாரிகள் வெளியே செல்ல முடியவில்லை. அதிகாரிகள் லஞ்சம் கேட்டதால், சிறைபிடிக்கப்பட்டனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
