'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சியில் மாணவர்கள் ஆர்வம் இன்ஜினியரிங் படிப்புகள் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம்
'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சியில் மாணவர்கள் ஆர்வம் இன்ஜினியரிங் படிப்புகள் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம்
UPDATED : ஜூலை 19, 2026 07:39 PM
ADDED : ஜூலை 11, 2026 04:50 PM
சென்னை, ஜூலை 12-
'தினமலர்' நாளிதழ், ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சார்பில், சென்னையில் நேற்று நடந்த, இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சிகளில், மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
பிளஸ் 2 முடித்து, அண்ணா பல்கலையின் கீழ் இயங்கும் இன்ஜினியரிங் கல்லுாரிகளில் சேர காத்திருக்கும் மாணவர்களுக்கு, கவுன்சிலிங் குறித்து வழிகாட்டும் வகையில், 'தினமலர்' நாளிதழும், ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்வி நிறுவனமும் இணைந்து, நேற்று சென்னையில் தாம்பரம், அண்ணா நகர் ஆகிய இடங்களில், 'வழிகாட்டி' எனும் நிகழ்ச்சியை நடத்தின.
இதில், நுாற்றுக்கணக்கான மாணவர்கள், தங்கள் பெற்றோருடன் பங்கேற்றனர். இதில், தொழில்நுட்ப கல்வி இயக்ககம் சார்பில் நடத்தப்படும் கவுன்சிலிங் குறித்த நடைமுறைகள் தொடர்பான விபரங்களை, தமிழ்நாடு இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கான செயலர் புருஷோத்தமன் விளக்கினார்.
அவரைத் தொடர்ந்து, ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இயக்குநர் நாகராஜன், இன்ஜினியரிங் படிப்புகள், கல்லுாரிகளை தேர்வு செய்யும் முறை, நல்ல கல்லுாரிகளை கண்டறிதல், வேலைவாய்ப்புக்கான தகுதிகளை வளர்த்துக்கொள்வதன் அவசியம் குறித்து, மாணவர்களுக்கு விரிவாக விளக்கினார்.
நிறைவாக, கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ் காந்தி, உலகில் மாறி வரும் தொழில்நுட்ப சூழல், எதிர்கால வேலைவாய்ப்பிற்கு கற்க வேண்டிய புதிய தொழில்நுட்பங்கள், மொழிகள், தேர்வு செய்ய வேண்டிய இணை படிப்புகள் தொடர்பான விபரங்களை விளக்கினார்.
கல்வியாளர்கள் பகிர்ந்த தகவல்களை, மாணவர்களும், பெற்றோரும் குறிப்பெடுத்துக் கொண்டதுடன், தங்களின் சந்தேகங்களையும் வல்லுனர்களிடம் கேட்டு தெரிந்துகொண்டனர்.
***
