/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாதவரம் பூங்கா பராமரிப்பை கைவிட்டதா தோட்ட கலைத்துறை?
/
மாதவரம் பூங்கா பராமரிப்பை கைவிட்டதா தோட்ட கலைத்துறை?
மாதவரம் பூங்கா பராமரிப்பை கைவிட்டதா தோட்ட கலைத்துறை?
மாதவரம் பூங்கா பராமரிப்பை கைவிட்டதா தோட்ட கலைத்துறை?
ADDED : ஆக 05, 2024 01:22 AM

சென்னை அ.தி.மு.க., ஆட்சியில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, மக்களின் கோரிக்கைகளை ஏற்று மாதவரம் பால்பண்ணையில் 20 ஏக்கரில் பிரமாண்ட தோட்டக்கலை பூங்கா அமைக்க, 2010 செப்டம்பரில் அடிக்கல் நாட்டப்பட்டது. இப்பணிக்கு, 5.80 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி, ஊட்டி, கொடைக்கானல், தேனி உள்ளிட்ட இடங்களில் இருந்து அழகிய பூச்செடிகள் எடுத்துவரப்பட்டு நடவு செய்யப்பட்டது. ஆனால், புயலில் சிக்கி அவை சேதம் அடைந்தன. அதேபோல, பூங்கா வளாகத்தில் மழை வெள்ளம் தேங்கி, செடிகள் அழுகி வீணானது.
இதையடுத்து, ஈரம் மற்றும் வெப்பத்தை தாங்கி வளரும் செடிகள், பூ மரங்களை வளர்க்க முடிவு செய்யப்பட்டது. நீண்ட இழுபறிக்கு பின், 2018ம் ஆண்டு, இந்த பூங்கா, மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. இங்குள்ள சிறிய குளத்தில் பரிசல் மற்றும் பெடல் படகு சவாரியும் துவக்கப்பட்டது.
தோட்டக்கலை செயல்விளக்க பூங்கா என்பதால், இங்குள்ள மரங்கள், செடிகளை பார்வையிடுவதற்கும் ஆய்வு செய்வதற்கும், பள்ளி குழந்தைகள், மாணவர்கள் அழைத்துவரப்படுகின்றனர். தினமும் காலை 9:00 மணி முதல் மாலை 6:00 மணிவரை பூங்காவில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
முறையான பராமரிப்பின்மை காரணமாக, குளத்தில் சவாரி செய்வதற்கு வாங்கப்பட்ட பரிசல்கள், படகுகள், படகு துறை ஆகியவை முழுமையாக சேதம் அடைந்துள்ளன.
பூச்செடிகள் காய்ந்து கிடக்கின்றன. செடிகளுக்கு தண்ணீர் தெளிக்கும் நீர் தெளிப்பான்களும் இயங்கவில்லை. ஆங்காங்கே, பனை மரங்களை சுற்றி புதர்மண்டி கிடக்கிறது. இருக்கைகள், குழந்தைகளின் விளையாட்டு சாதனங்களும் சேதம் அடைந்து உள்ளன.
தற்போது போதை வஸ்துக்கள் புழக்கம், கள்ளக்காதலர்களின் புகலிடமாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், குழந்தைகளை பூங்காவிற்குள் விட முடியவில்லை என, பெரும்பாலான பெற்றோர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இவற்றை கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு தோட்டக்கலைத்துறை அலுவலர்கள், காவலர்கள் தள்ளப்பட்டு உள்ளனர்.
இங்கு நடக்கும் சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்துவதற்காக, அ.தி.மு.க., ஆட்சியில் ஆங்காங்கே 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. அவை தற்போது காட்சிப்பொருளாக மாறியுள்ளன.
பூங்காவை பராமரிப்பதற்கு போதுமான ஊழியர்களும் நியமிக்கப்படவில்லை. அ.தி.மு.க., ஆட்சியில் அமைக்கப்பட்ட பூங்கா என்பதால், அதனை பராமரிப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் போதிய நிதி ஒதுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கட்டண விபரம்
பெரியவர் ரூ.40
சிறியவர் ரூ.20
ஒரு மாத நடைபயிற்சி 500
படகு சவாரி 40
பேட்டரி கார் 20
போட்டோ ஷூட் 5,000
குறும்படம் ஷூட்டிங் 20,000
சினிமா ஷூட்டிங் 35,000
அரசு நிகழ்ச்சி 20,000
தனியார் நிகழ்ச்சி 75,000