/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மழை பெய்தாலே மின் தடை அதிகாரிகள் ஆய்வு செய்வரா?
/
மழை பெய்தாலே மின் தடை அதிகாரிகள் ஆய்வு செய்வரா?
ADDED : ஜூலை 05, 2024 12:33 AM
சென்னை, சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களில், மழை பெய்தாலே மின் தடை ஏற்படுகிறது. எனவே, மின் சாதனங்கள் பராமரிப்பு பணி முறையாக நடக்கிறதா என, மேற்பார்வை பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
சென்னையில் சில இடங்களில் தரைக்கு அடியில் மின்வடம் பதித்தும், மற்ற இடங்களில் மின் கம்பம் வாயிலாகவும் மின் வினியோகம் செய்யப்படுகிறது.
இதில் மின்மாற்றி, மின் பகிர்மான பெட்டி உள்ளிட்ட மின் சாதனங்களில், எப்போது மின்சாரம் செல்வதால், வெப்பத்துடன் காணப்படுகின்றன.
இதனால், அவற்றில் பழுது ஏற்படாமல் இருக்கவும், மழையின் போது மின் விபத்து, மின் தடை ஏற்படாமல் இருக்கவும், குறிப்பிட்ட இடைவெளியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
இப்பணிகள், முறையாக செய்யப்படுவதில்லை என தெரிய வருகிறது. இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில், மழை பெய்தாலே மின் தடை ஏற்படுகிறது.
அதன்படி, நேற்று முன்தினம் இரவு, சென்னை மற்றும் புறநகரில் கன மழை பெய்தது. இதனால் செங்குன்றம், புழல், மணலி, தாம்பரம், வண்டலுார், ஊரப்பாக்கம் உட்பட, பல இடங்களில் மின் தடை ஏற்பட்டது.
இதனால், பொதுமக்கள் துாக்கமின்றி அவதிப்பட்டனர்.
இதுகுறித்து, பொதுமக்கள் கூறியதாவது:
மின் சாதனங்களின் பராமரிப்பு பணிக்காக, காலை முதல் மாலை வரை மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது. அந்த பணி நடந்த இடத்தில், மழை பெய்தால் மின் தடை ஏற்படுகிறது.
அதற்கு ஏன் பராமரிப்பு பணி செய்ய வேண்டும். இந்த பணி சரியாக நடக்கிறதா என, மேற்பார்வை மற்றும் தலைமை பொறியாளர்கள் ஆய்வு செய்ய வேண்டும். அப்போது தான், பணிகளில் அலட்சியம் ஏற்படாது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.